அரசு கலை கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்


அரசு கலை கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்
x

கோப்புப்படம்

164 அரசு கலை கல்லூரிகளில் 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வில் 40 ஆயிரத்து 287 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நிறைவு பெற்ற நிலையில், சுமார் 2 லட்சத்து 46 ஆயிரம் மாணவ-மாணவிகள் அதற்கு விண்ணப்ப பதிவு மேற்கொண்டு இருந்தனர்.

இவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது. அதில் 3 ஆயிரத்து 363 மாணவ-மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

முதல்கட்ட கலந்தாய்வு

தொடர்ந்து அந்தந்த கல்லூரிகள் விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவிகளின் தரவரிசை பட்டியலின் அடிப்படையில் அழைத்து கலந்தாய்வு மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்து வந்தனர்.

அதன்படி, முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடந்து முடிந்த கலந்தாய்வில், 25 ஆயிரத்து 253 மாணவிகள் உள்பட 40 ஆயிரத்து 287 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த 40 ஆயிரத்து 287 பேரில், 10 ஆயிரத்து 918 மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயன் பெற இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்தவர்கள் ஆவார்கள்.

முதலாம் ஆண்டு வகுப்புகள்

முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை இந்த கலந்தாய்வு நடக்க இருக்கிறது.

இந்த 2 கட்டங்களாக நடத்தப்படும் கலந்தாய்வில் சேர்க்கை பெறும் மாணவ-மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story