மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 28 இடங்கள் தேர்வு; கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்
மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 28 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.
மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 28 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.
28 இடங்கள் தேர்வு
விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது. இதில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று 28 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகளை மட்டும் கீழ்கண்ட பகுதிகளில் கரைக்கலாம் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஊமாரெட்டியூர், பவானி கூடுதுறை காவிரி ஆறு, கோபிசெட்டிபாளையம் சந்தியா வனத்துறை தடப்பள்ளி வாய்க்கால், வேட்டைகாரன்கோவில் கீழ்பவானி வாய்க்கால், பாரியூர் தடப்பள்ளி வாய்க்கால், மேவாணி, அத்தாணி சவுண்டப்பூர், பெருந்தலையூர், நஞ்சை புளியம்பட்டி, கள்ளிப்பட்டி ஆகிய இடங்களில் செல்லும் பவானி ஆறு, கொடிவேரி அணை, நல்லாம்பட்டி கீழ்பவானி வாய்க்கால் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்.
கருங்கல்பாளையம்
கடம்பூர் தொண்டூர் குளம், தாளவாடி தலமலை ரோடு வன ஓடை, தாளவாடி ஓங்கல்வாடி குட்டை மற்றும் இதர கிராம குளங்கள், சூரியம்பாளையம் மங்கலபடித்துறை காவிரி ஆறு, பர்கூர் துருசனாம்பாளையம் சோளகணை ரோடு ஜடையசாமி தடுப்பணை, சத்தியமங்கலம் மணிக்கூண்டு அருகில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் படித்துறை பவானி ஆறு, பூச்சக்காட்டு வலசு நொய்யல் ஆறு, கொடுமுடி காவிரி ஆறு மகுடேஸ்வரர் கோவில் படித்துறை, அறச்சலூர் கீழ்பவானி வாய்க்கால், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுப்பாலம், மன்னாதம்பாளையம் காவிரி ஆறு, பவானிசாகர் பகுடுதுறை, பழைய கொத்தமங்கலம் படித்துறை பவானி ஆறு, ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆறு, திட்டுப்பாறை கீழ்பவானி வாய்க்கால், செய்யாம்பாளையம் தடப்பள்ளி வாய்க்கால் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
போலீஸ் துறை சார்பில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களை மீறி வேறு இடத்தில் விநாயகர் சிலைகளை கரைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.