தமிழகத்தில் வங்கி கிளார்க் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பால் சர்ச்சை


தமிழகத்தில் வங்கி கிளார்க் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பால் சர்ச்சை
x
தினத்தந்தி 14 May 2022 10:53 PM IST (Updated: 14 May 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

வங்கி கிளார்க் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

மாநில மொழி அறிவு கட்டாயம் என்பதை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. 

ஏமாற்றம்

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள், ரெயில்வே அலுவலகங்கள், தபால் நிலையங்கள் உள்பட பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பேசும் வடமாநிலங்களை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் உள்ளது. இதனால் வங்கி சேவைகளை பெற விரும்பும் ஆங்கிலம் அல்லது இந்தி தெரியாத தமிழர்கள் அன்றாட சேவைகளை கூட பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். தமிழர்கள் ஒன்று சொல்ல, மறுமுனையில் இருக்கும் வடமாநிலங்களை சேர்ந்தவர்களால் அதனை புரிந்துகொள்ளமுடியாத சூழல் உள்ளது.

இதனால் தாங்கள் எந்த நோக்கத்துக்காக வங்கிக்கு சென்றோமோ, அதனை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை இருக்கிறது. சில வங்கிகளில் வடமாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளின் அருகே இருக்கும் தமிழ் அதிகாரிகள் அவர்களுக்கு உதவி செய்வதால் நிலைமை சற்று மேம்படுகிறது. நகர்ப்புறங்களில் இந்த நிலைமை என்றால், கிராமங்களில் சொல்லவே வேண்டியது இல்லை. கிராமங்களில் உள்ள தமிழர்கள் வங்கி சேவைகள் தொடர்பான சந்தேகத்தை கூட கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளமுடியாத நிலையே இருக்கிறது.

சேவை பெறுவதில் தடை

இதேபோல ரெயில்வேயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் தமிழர்கள் ஒரு ஊரை குறிப்பிட்டு டிக்கெட் கேட்க, இந்தி பேசுபவர்களால் அந்த உச்சரிப்பை புரிந்துகொள்ள முடியாமல் வேறு இடத்துக்கு டிக்கெட் கொடுத்துவிடுகிறார்கள். சில நேரங்களில் வேறு ஊர்களுக்கு செல்ல தமிழ் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிடுகிறார்கள். ரெயில் புறப்பட்டுவிடும் என்ற அவசரகதியில் பயணிகள் பார்க்காமல் சென்று, டிக்கெட் பரிசோதகரிடம் அபராதம் செலுத்திய சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறுகின்றன.

தபால் நிலையங்களிலோ நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. ஒரு திட்டத்தை பற்றி கேட்டால், வடமாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றொரு திட்டம் பற்றி கூறுகிறார்கள். அடுக்கடுக்கான திட்டங்கள் இருந்தாலும், அதில் தெளிவுப்படுத்திக்கொண்டு பயன்பெற முடியாத நிலையே தமிழகத்தில் இருந்து வருகிறது. தமிழர்களுக்கும் தமிழ் தெரியாத வடமாநிலங்களை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கும் இடையே தகவல்தொடர்பு முறையாக நடைபெறாததால் சேவை பெறுவதில் தடை ஏற்படுகிறது.

சர்ச்சை

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கி பணிகளில் கிளார்க் பணிகளுக்கு அந்தந்த மாநில மொழிகளை படிக்க, எழுத தெரிந்திருக்கவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தமிழர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்து வந்தது.

இந்த நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் தன்னாட்சி நிறுவனமான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்.) கிளார்க் பணிக்கு மாநில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டியது கட்டாயம் இல்லை என்று அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) மற்றும் பிற இன்சூரன்சு நிறுவனங்கள் பணியாளர்களுக்கான தேர்வு அறிவிப்பில் மாநில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்று குறிப்பிட்டு வருகிறது.

கண்டனம்

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பில் மாநில மொழிகள் முன்னுரிமை அடிப்படையிலானது என்று கடந்த 4 வருடங்களாக கூறி வருகிறது. இதனால் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட உள்ள 843 கிளார்க் பணியிடங்களில் 400-க்கும் மேற்பட்ட பணிகள் வெளிமாநிலத்தவர்களுக்கு ஒதுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய பிற பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் சம்மேளனம், இந்திய வங்கிகள் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

தமிழ் தெரியாமல்...

இதுகுறித்து அகில இந்திய பிற பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஜி.கருணாநிதி கூறியதாவது:-

வங்கி தேர்வு நடத்தும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்படும் விளம்பரத்தில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை, அது ஒரு முன்னுரிமை மட்டுமே என்று விளம்பரப்படுத்தி வருகிறது. தற்போது 2022-23-ம் ஆண்டுக்கான கிளார்க் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்று 843 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் அதாவது 400-க்கும் அதிகமாக வெளிமாநிலத்தவர்கள், தமிழ் தெரியாமல் பணியில் சேர உள்ளனர்.

வங்கிகளில் கிளார்க் பணியில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நேரடி தொடர்பில் இருப்பவர்கள். குறிப்பாக கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் அவர்களுடைய சேவை மாநில மொழியிலேயே இருப்பது அவசியம். நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் மட்டும் குறிப்பாக கிளார்க் பணிகளுக்கு இந்த விதி தளர்த்தப்பட்டதால் மொழி தெரியாதவர்களும் பணிக்கு சேரும் நிலை ஏற்பட்டு, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

மாநில மொழி அறிவு

தமிழகத்தில் உள்ள வங்கி பணிகளில் முதல் சில ஆண்டுகளில் பிற மாநிலங்களை சேர்ந்த 20 முதல் 30 பேர் பணியமர்த்தப்பட்டனர். சமீபத்திய (2022-23) பணியாளர் தேர்வில் தமிழகம் சாராத வெளி மாநிலங்களை சேர்ந்த 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தேர்வு பட்டியலில் இருக்கின்றனர். இவ்வாறு புதிதாக சேருபவர்கள் கிராமப்புறங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். வங்கிகளுக்கு வரும் தமிழகத்தை சேர்ந்த வாடிக்கையாளர்கள் கேட்பது புரியாததால், தங்கள் அருகேயுள்ள தமிழ் பேச தெரிந்த அதிகாரிகளிடம் செல்லுமாறு அறிவுறுத்துகிறார்கள்.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கி பணிகளில் கிளார்க் பணிகளுக்கு அந்தந்த மாநில மொழிகளை படிக்க, எழுத, பேசவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கே வாய்ப்புகள் இருந்தது. எனவே வங்கி தேர்வு நடத்தும் நிறுவனம் கிளார்க் பணிக்கு மாநில மொழி அறிவு கட்டாயம் என இருந்த விதியை மீண்டும் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story