கோவில்களை வருகிற 1-ந்தேதி திறக்க திட்டம் அறநிலையத்துறை ஆலோசனை


கோவில்களை வருகிற 1-ந்தேதி திறக்க திட்டம் அறநிலையத்துறை ஆலோசனை
x
தினத்தந்தி 21 May 2020 5:15 AM IST (Updated: 21 May 2020 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் மூடிக் கிடக்கும் கோவில்களில் சாமி தரிசனத்துக்காக பக்தர்களை வருகிற 1-ந்தேதி முதல் அனுமதிப்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சென்னை,

ஊரடங்கால் மூடிக்கிடக்கும் கோவில்களை திறக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பக்தர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

அதனடிப்படையில் அறநிலையத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் இணை-ஆணையர் , துணை-ஆணையர், உதவி-ஆணையர் அந்தஸ்தில் உள்ள கோவில் நிர்வாகிகளிடம் கோவில்களை வரும் 1-ந்தேதி திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

அதன்படி கோவில்கள் திறக்கப்பட்டால் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு கிருமி நாசினி மூலம் கையை சுத்தம் செய்ய வைப்பது, தினசரி 500 பேரை மட்டும் அனுமதிப்பது, அதுவும் சமுதாய இடைவெளியை கடைப்பிடிப்பது, கோவில் குருக்கள், பட்டாச்சாரியார்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பது, அன்னதான கூடத்தை திறக்கலாமா? என்பது குறித்து பல்வேறு கருத்துகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் கோவில்களில் சமூக இடைவெளிக்காக ஒரு சில கோவில்களில் சுண்ணாம்பு மூலம் வளையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் பெரும்பாலான கோவில்களில் பராமரிப்பு பணிகளும் நடந்து வருகிறது.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி வடிவுடையம்மன் கோவில்களில் இணையதளம் மூலம் பூஜைகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், கோவில்கள் திறப்பது குறித்து தமிழக அரசின் உத்தரவை ஏற்று வருகிற 1-ந்தேதி பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில்கள் திறப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்

Next Story