பெண் போலீசுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாரணை கமிட்டி


பெண் போலீசுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாரணை கமிட்டி
x
தினத்தந்தி 20 Aug 2018 4:20 AM IST (Updated: 20 Aug 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

பெண் போலீஸ் மற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை,

பெண் போலீஸ் மற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றி விசாரிக்க ஏற்கனவே விசாகா என்ற கமிட்டி செயல்பாட்டில் இருந்தது. அந்த கமிட்டியின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால், அது செயல்பாடற்ற நிலையில் இருந்தது. தற்போது அந்த கமிட்டிக்கு புத்துயிர் கொடுத்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அந்த கமிட்டி செயல்படும். கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வுபெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக சீனியர் நிர்வாக அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் இந்த கமிட்டியில் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்று அரசாணையில் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

செயல்பாடற்று கிடந்த இந்த கமிட்டிக்கு தற்போது அரசாணை மூலம் புத்துயிர் கொடுக்கப்பட்டு உள்ளது. போலீஸ் துறை மட்டுமல்லாமல் அரசு துறை அனைத்திலும் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து இந்த கமிட்டி விசாரணை நடத்தும். இந்த கமிட்டி கொடுக்கும் விசாரணை அடிப்படையில் அரசு மேல் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

உயர் அதிகாரிகள் இருவரிடையே உள்ள பிரச்சினை குறித்து இந்த கமிட்டி விரைவில் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story