2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியா? எதிர்பார்த்ததா?
2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியா? எதிர்பார்த்ததா? என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள், வங்கியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியா? எதிர்பார்த்ததா? என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள், வங்கியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ.500, ரூ.1,000-ம் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது.
வீடுகளில் வைத்திருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் பணத்தை மாற்றுவதற்கு பொதுமக்கள் பட்ட கஷ்டத்திற்கு அளவே இல்லை. இந்த நிலையில் தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரைத்தான் செல்லுபடியாகும் என்ற நிலையில் அந்த ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று இருக்கிறது.
இந்த அறிவிப்பு ஏதும் அதிர்ச்சியாக தெரிகிறதா? அல்லது எதிர்பார்த்ததா? என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள், பேராசிரியர், வங்கியாளர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுகுறித்த விவரம் வருமாறு:-
பாதிப்பு இல்லை
நிதி ஆலோசகர் வ.நாகப்பன் கூறும்போது, 'உலகம் முழுவதும் ரூபாய் நோட்டுகளைப் பொறுத்தவரையில் ரூ.1, ரூ.2, ரூ.5 என்றும், அடுத்தகட்டமாக ரூ.10, ரூ.20, ரூ.50 தொடர்ந்து ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 என்று தான் இருப்பது வழக்கம். இப்படி இருந்தால் தான் குறைந்த தொகையை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள எளிதாக இருக்கும் என்பது நடைமுறையில் உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படுவதாக அறிவித்து எடுக்கப்பட்ட முடிவு நல்ல முடிவுதான். பொருளாதார ரீதியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஜி.பே, கியூ.ஆர். கோடு உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைகள் செய்வதால் ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் இருந்து எடுப்பதால் சாமானியர்கள் எவரும் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள், ஒரு சில தொழில் அதிபர்களுக்கு பாதிப்புகள் வரலாம். 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு சட்டம் கொண்டு வரும்போது எந்தவித தகவல்களும் தெளிவாக தெரிவிக்காமல் வெளியிட்ட அறிவிப்பால் பொதுமக்கள் குழப்பத்திற்கு ஆளானார்கள். ஆனால் தற்போது பொதுமக்களுக்கு இதுதொடர்பாக எந்தவித சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக ரிசர்வ் வங்கி, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், அதற்கான பதில்களை தெளிவாக வழங்கி உள்ளது. அத்துடன் பணத்தை மாற்றிக்கொள்வதற்கும் போதிய கால அவகாசமும் வழங்கி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் எந்தவித பதற்றமோ, குழப்பமோ ஏற்படவில்லை. மத்திய அரசு மட்டுமே குறிப்பிட்ட பணம் செல்லாது என்று அறிவிக்க முடியும் என்பதால், ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டை புழக்கத்தில் இருந்து எடுப்பதாக போதிய தகவல்களுடன் அறிவித்து உள்ளது. 2016-ம் ஆண்டு பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்று தற்போது போதிய கால அவகாசம், தகவல்கள் தெளிவாக கொடுத்திருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாட்டில் 80 சதவீத பரிவர்த்தனை யு.பி.ஐ., என்ற ஆன்லைன் மூலம் நடப்பதால் தற்போது ரூ.2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.
மறைமுக சலுகை
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறும்போது, 'கருப்பு பணத்தை ஒழித்துவிடுவோம், கள்ளப்பணத்தை ஒழித்துவிடுவோம் என்று கூறி கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்திற்கு கொண்டு வந்தது. இது தனிநபரிடம் குவிந்ததை பார்த்து இருக்கிறோம். ரிசர்வ் வங்கி அச்சிட்ட ரூ.2 ஆயிரம் பண நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறையத் தொடங்கியது. சுமார் ரூ.6 லட்சத்து 73 ஆயிரம் கோடி மதிப்பில்ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அவற்றுள் ரூ.3 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. மீதம் உள்ள சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் ரூபாய் பண நோட்டுகள் கருப்பு பணமாக மாறி உள்ளது தெரியவருகிறது. இப்போது கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.2 ஆயிரம் பண நோட்டுகளை ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றுக்கொண்டது வேடிக்கையாக உள்ளது. காரணம் ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணத்திற்கு காரணம் என்று கூறிய மத்திய அரசு, ரூ.2 ஆயிரம் நோட்டை அச்சிட முடிவு செய்தது விந்தையாக உள்ளது. நாட்டில் கருப்பு பணம் புழங்குவது அனைவருக்கும் தெரிந்தது. அதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு பதிலாக பொதுமக்களுக்கு தொல்லை தர கூடிய இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையற்றது. கருப்பு பணம் என்பது யாரிடம், எவ்வளவு உள்ளது என்பது மத்திய அரசுக்கு தெரியும். அவர்களிடம் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலமாக பல கோடி ரூபாய்களை பெற்ற பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்பது இயலாதது. அதன் காரணமாகத்தான் இந்த அறிவிப்பிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுகிறார்களே ஒழிய, சட்டவிரோதமாக பண மதிப்பிழப்பை வாபஸ் என்று கூறவில்லை. எனவே இது கருப்பு பணம் வைத்துள்ளவர்களுக்கு மறைமுக சலுகையாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது' என்றார்.
வரவேற்கத்தக்கது
வேலூர் அனைத்து ஜவுளி மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.வி.எம்.குமார் கூறுகையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் தற்போது 30 சதவீதம் நோட்டுகள் தான் பயன்பாட்டில் உள்ளது. அதனால் அவற்றை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 70 சதவீதம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களிடம் முடங்கி உள்ளது. ரூ.500 நோட்டுகளை விட ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பதுக்குவது எளிது. பணப்புழக்கம் இன்மை, பதுக்கலை சரி செய்வதற்கு தான் இந்த நடவடிக்கை என்று நினைக்கிறேன். வங்கிகளில் செப்டம்பர் மாதம் வரை ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றி கொள்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தினமும் லட்சக்கணக்கில் வியாபாரம் நடைபெறும் பல கடைகளில் கூட ரூ.2 ஆயிரம் நோட்டுகள் குறைவாகவே வருகின்றன. எனவே ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும் என்றார்.
கருப்பு பணம்
நெமிலியை சேர்ந்த வனராணி கிருஷ்ணன் கூறுகையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பொதுவாக பொதுமக்களின் பயன்பாட்டில் இல்லை. இதை ரிசர்வ் வங்கி திரும்பபெறுவது வரவேற்கத்தக்கது. இந்த ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் போது கருப்பு பணங்கள் ஒழியும் என்று மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது என்ற புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் போது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதை திரும்பபெறுவதால் ஏழை மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை என்றார்.
பதுக்கி உள்ளவர்களுக்கு பாதிப்பு
திருவண்ணாமலையை சேர்ந்த விஜய் கூறுகையில், இந்தியாவில் 90 சதவீத மக்கள் ஏழைகளாகவும், மீதமுள்ள 10 சதவீத மக்கள் பணக்காரர்களாகவும் உள்ளனர். இன்றைய சூழ்நிலையில் பணக்காரர்களிடம் மட்டுமே இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது ஏழை, எளிய மக்களை பாதிக்காது. பணத்தை கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருப்பவர்களுக்கே இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவர்கள் வங்கிகளில் மாற்றும் போது கணக்கு காட்ட வேண்டிய நிலை வரும். இதனால் அவர்கள் வரி செலுத்த வேண்டி இருக்கும். இதனால் அரசுக்கு வருவாய் தானே தவிர ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. அதனால் இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன் என்றார்.
பொதுமக்கள் பாதிப்பு
வாணியம்பாடியை ேசர்ந்த கீத்தபிரியா கூறுகையில், இதனால் சாதாரண பொதுமக்கள் பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பணம் செல்லாது என அறிவித்த உடனே சிறிய கடை முதல் பெரிய கடை வரையில் பணத்தை வாங்க மறுக்கின்றனர். வங்கிகளுக்குச் சென்றால் அதனை டெபாசிட் செய்து அதன் பிறகு தான் பணத்தை பெற முடியும் என கூறுகின்றனர். அதுவும் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு அவைகளை மீண்டும் செயல்படுத்தும் நிலை உள்ளது. அதுவரையில் சாதாரண மக்கள் சிறிதளவு பணம் வைத்திருப்பவர்களுடைய நிலை என்னவாகும், இதனை சற்று யோசித்து பணத்தை குறிப்பிட்ட நாளில் வங்கிகளில் பெறும் நிலைமையை உருவாக்கி இருக்க வேண்டும். 2 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை வங்கியில் மாற்றி உடனடியாக தருவதற்கான நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும். சாதாரண மக்களுக்கு உடனடியாக பணத்தை வங்கியில் மாற்றுப் பணமாக பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவரும், நெல் அரிசி வியாபாரியுமான கு.சரவணன் கூறுகையில், கடந்த 2016-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்து புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. இதனால் பெரும் வியாபாரிகள் அதிகப்படியான பணத்தை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது. அதிகப்படியான தொகையை சிறிய பைகளில் எடுத்துச் செல்வதால் பாதுகாப்பாகவும் இருந்தது. ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் தான் புழக்கத்தில் உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதில்லை. மேலும் சில்லரை வியாபாரம் செய்யும் கடைகளில் 2000 ரூபாய் நோட்டை கொடுத்து பொருட்களை வாங்கும் போது அதற்கு மீதி தொகை கொடுப்பது சிரமமாக இருந்தது. இப்பொழுது முழுமையாக நிறுத்தப்படுவது பெரிய வியாபாரிகளுக்கு பாதகமாகவும், சிறிய வியாபாரிகளுக்கு சாதகமாகவும் இருக்கும். மேலும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மீண்டும் புதிய வடிவில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்றார்.
பொதுமக்கள் அவதி
குடியாத்தம் அருகே கல்லப்பாடியை சேர்ந்த ஆர்.டி.ஜி.கஜேந்திரன் கூறுகையில், அரசாங்கம் வெளியிட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளும் மக்களிடம் புழக்கத்தில் இருக்க வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே 2000 ரூபாய் நோட்டுகளை பெரும்பாலான மக்கள் பார்க்கவே இல்லை. இது அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகள் இருப்பு வைக்கவும், கடத்திச் செல்லவும் வசதியாக இருந்து வருகிறது. சில்லரை மாற்றுவதற்குக் கூட பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை திரும்ப பெற்று, 100, 500 ரூபாய்களின் எண்ணிக்கையை அதிக அளவில் புழக்கத்தில் விட வேண்டும். ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகளுக்கான காரணங்களை வெளிப்படையாக சொல்ல முடியாவிட்டாலும், அது மக்கள் நலனை சார்ந்துதான் இருக்கும். எனவே இதை வரவேற்கிறோம் என்றார்.