தமிழக அரசு ஏற்பாடு:காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்-பக்தர்கள் கருத்து


தமிழக அரசு ஏற்பாடு:காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்-பக்தர்கள் கருத்து
x

காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம் செல்வது குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

திருநெல்வேலி

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு புனித தலம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது அங்கு சென்றுவர வேண்டும் என்பது அவரவர் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

இந்துக்கள் காசி செல்வதை புண்ணியமாக கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதை பெருமையாக சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணத்தை கடமையாக கொள்கிறார்கள்.

வசதி படைத்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் மேற்சொன்ன புனித தலங்களுக்கு சென்று வந்து விடுகிறார்கள்.

வசதி குறைந்தவர்களால் அவ்வாறு செல்லமுடிவது இல்லை.

அரசு ஏற்பாடு

அவ்வாறு வசதி இல்லாதவர்கள் புனித தலங்களுக்கு சென்றுவர அரசாங்கம் உதவி வருகிறது.

ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 550 பேர் அரசு நிதி உதவியுடன் ஜெருசலேம் சென்று வருகிறார்கள். தமிழக அரசின் மானிய உதவியுடன் இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணம் செல்கிறார்கள்.

அதுபோல் இந்துக்கள் 500 பேர் ஆண்டுதோறும் மானசரோவர், முக்திநாத் ஆகிய தலங்களுக்கு சென்றுவர உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கான திட்டத்தை தொடங்கிவைத்தார்.

காசி ஆன்மிக பயணம்

இந்த நிலையில் கடந்த மே மாதம் சட்டசபையில் நடந்த இந்துசமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை அறிவிப்பில், "காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பேர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதற்கான செலவு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், 'ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 20 மண்டலங்களில் 200 பேர் ஆன்மிக பயணத்துக்கு ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். தகுதி வாய்ந்தவர்கள் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அந்தந்த மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உள்ளவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்த ஆண்டு காசி புனித பயணத்துக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 200 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட இருக்கிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கோடி புண்ணியம்

தமிழக அரசின் இந்த ஆன்மிக பயண திட்டத்தை மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

நெல்லை திருஉருவாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழு செயலாளர் கயிலை முருகேசன்:-

இந்துக்கள் வாழ்க்கையில் ஒரு பழமொழி உண்டு. திருவாரூர் அல்லது காஞ்சீபுரத்தில் பிறக்க வேண்டும். சிதம்பரத்தில் வழிபட வேண்டும். அண்ணாமலையாரை நினைக்க வேண்டும். காசியில் முக்தி பெற வேண்டும் என்று கூறுவார்கள். காசிக்கு சென்று கங்கையில் நீராடி விஸ்வநாதரை வழிபடுவது கோடி புண்ணியம் ஆகும். தமிழக அரசு தற்போது நல்ல செயலை செய்ய முன்வந்துள்ளது. இது தொடர வேண்டும்.

நெல்லை டவுனை சேர்ந்த பகவதி ராஜன்:-

காசிக்கு செல்வது என்பது எல்லோருக்கும் எட்டாக்கனியாகவே இருந்தது. விமானம் மற்றும் ரெயில் மூலம் தற்போது பலர் சென்று வருகிறார்கள். ஆனால் இதற்கு அதிக செலவு ஆகிறது. இந்த நேரத்தில் தற்போது காசிக்கு புனித பயணம் அழைத்து செல்லும் தமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம். ஆனால், ஒரு மண்டலத்துக்கு 10 பேரை மட்டுமே அழைத்து செல்வது போதாது. மாவட்டத்துக்கு 100 பேர் வரை அழைத்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

வயது வரம்பை மாற்ற வேண்டும்

மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை இரா.வேலம்மாள்:-

ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு புனித பயணம் அழைத்து செல்லும் திட்டத்தை வரவேற்கிறோம். அடியார்களில் பலர் காசிக்கு பணம் இல்லாமல் போக முடியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது. அடியார்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் காசிக்கு அழைத்து செல்லப்படுவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அரசு வழிகாட்டுதலில் உடல் தகுதி பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் 60 வயது முதல் 70 வயது வரை என்பதை 50 வயதில் இருந்து 70 வயது வரை என்று மாற்றி அமைக்க வேண்டும்.

நெல்லையை சேர்ந்த முத்துலட்சுமி:-

அரசின் நடவடிக்கை மூலம் சைவம் தழைக்கும். காசிக்கு செல்ல மிகுந்த ஆசையில் இருக்கிறோம். இந்த முறை அரசு சார்பில் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தம்பதி

பாக்கியலட்சுமி:-

இந்துக்களின் மக்கள்தொகை அதிகம் ஆகும். நமது நாட்டுக்குள்ளேயே அழைத்து செல்வதால் செலவு குறைவுதான். எனவே, மாதந்தோறும் இதற்கான திட்டத்தை வகுத்து அழைத்துச்செல்ல வேண்டும்.

கோமதி சொக்கலிங்கம்:-

புண்ணிய தலத்துக்கு தம்பதியாக மட்டுமே அழைத்துச்செல்ல வேண்டும். எனவே, காசி யாத்திரைக்கு கணவன்-மனைவியை சேர்த்து அழைத்து செல்லும் திட்டமாக செயல்படுத்த வேண்டும்.

சிபாரிசு கூடாது

பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சுந்தரவேல்:-

காசிக்கு புனித பயணம்திட்டம் வரவேற்புக்குரியது. பணம் செலவு செய்து செல்ல முடியாமல் இருக்கும் ஏழைகளுக்கு இது பயன்படும் வகையில் உள்ளது. பயனாளிகளை தேர்வு செய்யும்போது சிபாரிசு எதுவும் இல்லாமல், கஷ்டப்படுபவர்களை அழைத்து செல்லும் வகையில் தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் இருக்கும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அய்யப்பன்:-

நான் ஆண்டுதோறும் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வருகிறேன். இந்த ஆண்டும் செல்கிறேன். மேலும் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா ஆசிரமத்துக்கும் செல்கிறேன். இன்னும் பல கோவில்களுக்கு செல்வது வழக்கம். என்னை போன்று வயதானவர்கள் பலர் கோவில்களுக்கு செல்கிறார்கள். பலருக்கு வசதி இல்லாமல் செல்ல முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு காசிக்கு செல்ல இந்த திட்டம் உதவியாக உள்ளது. ஆனால், வயது வரம்பில் 70 என்று இருப்பதை 80 ஆக உயர்த்த வேண்டும். எனக்கு தெரிந்து சிலர் 80 வயதிலும் கூட ஆரோக்கியமாக உள்ளனர்.

அதிகரிக்க வேண்டும்

தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்:-

இந்த திட்டம் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் காசிக்கு சென்று இறைவனை வழிபட ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஒரு மண்டலத்துக்கு 10 பேர் வீதம் மொத்தம் 200 பேருக்கு அரசு இந்த வாய்ப்பை அளிக்கிறது. இதனை ஒரு மண்டலத்துக்கு 20 பேர் என அதிகரித்து கொடுத்தால் மேலும் 200 பேர் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மொத்தத்தில் இந்த திட்டம் இந்துக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story