சிவகங்கை நகரில் தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சிவகங்கையில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிலோ பிளாஸ்டிக் பைகளை உணவு பொருள் பாதுகாப்புத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
சிவகங்கை,
சிவகங்கையில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிலோ பிளாஸ்டிக் பைகளை உணவு பொருள் பாதுகாப்புத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
பிளாஸ்டிக் பொருட்கள்
சிவகங்கை நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணக்குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் தினேஷ்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் முருகானந்தம் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் சிவகங்கை நகரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.
இதில் மொத்த விற்பனை கடைகளில் நடைபெற்ற சோதனையில் 6 கடைகளில் இருந்து சுமார் 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டது. இது தவிர ஓட்டல்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன.
அபராதம்
சோதனை செய்யப்பட்ட 6 மொத்த விற்பனை கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இது போல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. இது தவிர தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த ஒரு கடைக்காரருக்கு ரூ ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 2 கோழி இறைச்சி விற்பனை கடைகளில் பழைய இறைச்சிகளை பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அந்த 2 கடைகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் 10 கிலோ கோழி இறைச்சி பிரிட்ஜில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் உடனடியாக கைப்பற்றி அழித்தனர். மேலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
=======
கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றியதை படத்தில் காணலாம்.