ரூ.200 கோடி காடா ஜவுளி துணிகள் தேக்கம்


ரூ.200 கோடி காடா ஜவுளி துணிகள் தேக்கம்
x
தினத்தந்தி 28 Jun 2023 9:14 PM IST (Updated: 29 Jun 2023 4:14 PM IST)
t-max-icont-min-icon

தொழில் முடக்கம், நூல் விலை உயர்வு காரணமாக ரூ.200 கோடி மதிப்பிலான ஜவுளி துணி தேக்கம் அடைந்துள்ளது.

திருப்பூர்

காடா துணி

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2½ லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும், 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தற்போது தொழில் முடக்கம், நூல் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட காடா ஜவுளி துணி விற்பனையாகவில்லை.

இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்வது முற்றிலும் முடங்கியுள்ளது. திருப்பூர், கோவை, மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி நெசவுத்தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் மாற்று தொழிலை தேடி சென்றவாறு உள்ளனர். திருப்பூர், கோவை, மாவட்டங்களில் பல விசைத்தறிக்கூடங்கள் பூட்டிக் கிடக்கின்றன. இதற்கிடையே உலக நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஜவுளி ஏற்றுமதி என்பது வெகுவாக குறைந்துள்ளது.

வரி வசூல்

இந்த நிலையில் ஜவுளிக்கு ஜிஎஸ்டி வரி, பருத்திக்கு வரி, பருத்தியின் நூலுக்கு வரி, உற்பத்தி செய்யப்படும் ஜவுளிக்கும் வரி, விற்பனை செய்யப்படும் ஜவுளிக்கும் வரி என பல அடுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது. இதனால் உற்பத்தி செய்யப்படும் துணியின் விலை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்கிறது. மேலும் நூல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் விசைத்தறியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 3 மாதங்களாக ஜவுளி ரகங்கள் விற்பனை இன்றி தேங்கி கிடக்கின்றது. பல்லடம் பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் துணிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை தடுக்கும் வகையில் துணி ரகங்கள் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்க வேண்டும். ஆன்லைன் என்னும் இணையதள வர்த்தகத்தில் இருந்து பஞ்சுவை நீக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்து எடுத்து வரவேண்டி உள்ளது. இதனை தவிர்க்க தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story