காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தீவிர கண்காணிப்பு
குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலிவு விலைக்கு வாங்கி வாகனங்களில் கேரளாவுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதை தடுப்பதற்காக மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
2 டன் அரிசி பறிமுதல்
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் ராஜாக்க பெருமாள் தலைமையிலான போலீசார் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. உடனே, போலீசார் காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். போலீசாரை கண்டதும் டிரைவர் காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார்.
இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் சிறுசிறு மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர், அரிசியை காப்புக்காடு அரசு அரிசி குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.