சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு...!
சபரிமலைக்கு சென்ற 2 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது. சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மகர ஜோதி தரிசன நாளில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும் என கோவில் நிர்வாகிகள் எதிர்ப்பார்க்கிறார்கள். இதையடுத்து சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சபரிமலையில் யாத்திரை மேற்கொண்டிருந்த விருதுநகரை சேர்ந்த முருகன்(62), சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கன்னியப்பன் (74) ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.