வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
நெல்லை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை டவுன் ஜாமியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது30). இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் சமையல் வேலையை முடித்துவிட்டு அவருடைய நண்பரை சந்திப்பதற்காக பாளையங்கோட்டை அருகே உள்ள சாரதா நகரில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நபர்கள் அவசரமாக போன் பேச வேண்டும் எனக்கூறி செல்போனை வாங்கினர். பின்னர் முகமது உசேன் செல்போனை கேட்டதற்கு தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று மிரட்டி ரூ.8,500, வெள்ளி சங்கிலி, மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து முகமதுஉசேன் பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் வேலங்குளத்தை சேர்ந்த வெயில்முத்து (23), வாகைக்குளத்தைச் சேர்ந்த மகாராஜன் (24) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.