வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் பிடிபட்டனர்
சொரகுளத்தூர் காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் பிடிபட்டனர்
திருவண்ணாமலை சொரகுளத்தூர் காப்புக்காட்டில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள ரெட்டியார்பாளையம் ஏரியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக திருவண்ணாமலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருவண்ணாமலை வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சொரகுளத்தூர் வனப்பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனவிலங்குகளை வேட்டையாடி கொண்டிருந்த கொண்டம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 30), சின்னமணி (34), கழிக்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (45), ஆறுமுகம் ஆகியோரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
அதில் சந்தோஷ், ஜெய்சங்கரை வனத்துறையினர் பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பியோடி விட்டனர்.
அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து, சார்ஜ் பேட்டரி, நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டாக்கள், இரும்பு குண்டுகள், கம்பி வலைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் வனவிலங்குகளை வேட்டையாடிய சந்தோஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெய்சங்கருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
மேலும் தப்பியோடிய 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.