நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் தற்கொலை
நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திருச்சியை அடுத்த குழுமணி அருகே உள்ள ஏகிரிமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 43). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அந்த நிதிநிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நிதிநிறுவன உரிமையாளர் ஆறுமுகம் தலைமறைவாகிவிட்டார். இதனால் பணம் செலுத்தியவர்கள் ரஜினியிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்தார். ் இந்த நிலையில் பாக்யராஜ் என்பவர் தான் நிதி நிறுவனத்தில் செலுத்திய ரூ.1½ லட்சத்தை திருப்பித் தருமாறு கேட்டு ரஜினியை மிரட்டினாராம். இதனால் மனம் உடைந்த ரஜினி கடந்த 16-ந் தேதி களைக்கொல்லி மருந்தை மதுபானத்துடன் கலந்து குடித்துவிட்டு முத்தரசநல்லூர் அருகே உள்ள கூடலூர் பகுதியில் மயங்கி கிடந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ரஜினிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தா.பேட்டையை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை (35) கூலி தொழிலாளியான இவர் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இதை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.