மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகதுரை என்பவர் தனது மனைவியை பிரசவத்திற்காக பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்திருந்தார். அன்று இரவு மருத்துவமனை அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நாகேஸ்வரன் மகன் மலர்வாசகண்ணன் (வயது 27), புளியங்குடி நாடார் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் குரு கார்த்திகேயன் (22) என்பதும், ஆறுமுகதுரையின் மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், 2 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.