கல்லூரி அருகே ஆயுதங்கள் பறிமுதலான வழக்கில் - மேலும் 2 மாணவர்கள் கைது
சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே ஆயுதங்கள் பறிமுதலான வழக்கில் மேலும் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு கோஷ்டிகளாக செயல்படுவதாக தெரிகிறது. இவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதல் கல்லூரி வளாகத்திலும் நடக்கலாம் என்று கருதி கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கல்லூரிக்குள் சென்ற மாணவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். அப்போது கல்லூரியின் பின்புறம் உள்ள சுவரையொட்டி மர்ம பை ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த பைக்குள் 6 பட்டாக்கத்திகள் மற்றும் 20 காலியான மதுபாட்டில்கள் காணப்பட்டது. அவற்றை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 மாணவர்கள் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படிக்கும் 2 மாணவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று மாரிமுத்து, தமிழ்செல்வன் என்ற மேலும் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் அவர்கள் பெரம்பூர் பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கு 'ரூட்' தலையாக செயல்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது வேட்டை தொடர்ந்து நடக்கிறது. கைதான மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டனர்.