2 வாலிபர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை
2 வாலிபர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை கோல்டன் நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (வயது 24). இவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி புதுக்கோட்டை-திருச்சி பைபாஸ் ரோட்டில் உள்ள கருவேப்பிலான் கேட் அருகே மோட்டார் சைக்கிளில் தனது நண்பர் சரவணனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது கருவேப்பிலான் கேட்டை சேர்ந்த ஷாஜகான் (36), சிப்காட்டை சேர்ந்த விஜய்பாரத் (35) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் வந்து ஜாபர்சாதிக் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து அவர் அணிந்திருந்த ¾ பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ.500 பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக அவர் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகான், விஜய் பாரத் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயகுமாரி ஜெமிரத்னா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் ஷாஜகான், விஜய்பாரத் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.