2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
வெவ்வேறு இடங்களில் உள்ள 2 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
வெவ்வேறு இடங்களில் உள்ள 2 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மளிகை கடை
திருச்சி - தஞ்சாவூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சரண்ராசித்(வயது 46). இவர் இதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்துள்ளார்.
அப்போது கடை திறக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.65 ஆயிரம் மற்றும் 2 சிகரெட் பண்டல்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சரண்ராசித் கொடுத்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரக்கடை
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா(வயது 32). இவர் தனியார் உரக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பணி முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் கடைக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இருந்த ரூ.3 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.
மேலும் கடையின் மேல்தளத்தில் உள்ள பரமேஸ்வரி என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு இருந்த வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர்.