ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
பொள்ளாச்சி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ரோந்து
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவின் பேரில், கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பொள்ளாச்சி-ஆழியாறு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சமத்தூர் பகுதியில் தனியார் ஒருவரது மாட்டு தொழுவம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று மூட்டைகளை பிரித்து பார்த்த போது, ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சமத்தூர் பகுதியை சேர்ந்த பாலுசாமி (வயது 52), வீரமுத்து (35) ஆகிய 2 பேருக்கு ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
2 பேர் கைது
விசாரணையில் ஆனைமலை, அங்கலகுறிச்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி உள்ளனர். பின்னர் ஆனைமலை பகுதியில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலுசாமி, வீரமுத்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 50 கிலோ எடை கொண்ட தலா 10 மூட்டைகளில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 2 மொபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தும் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.