சரக்கு ரெயிலில் 1,700 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன
ஒடிசாவில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,700 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன.
உர மூட்டைகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி நடவு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுறவு சங்கங்களுக்கு உர மூட்டைகள் சரக்கு ரெயிலில் வந்தன.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து 29 வேகன்களில் டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உர மூட்டைகள் 1,700 மெட்ரிக் டன் புதுக்கோட்டைக்கு நேற்று வந்தன. இதனை வேகன்களில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினர். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1,100 மெட்ரிக் டன் உர மூட்டைகள் கூட்டுறவு சங்கங்களுக்கும், தனியார் உர கடைகளுக்கும் லாரிகளில் பிரித்து அனுப்பப்பட்டன.
ராமநாதபுரம்
இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 500 மெட்ரிக் டன் உர மூட்டைகளும், சிவகங்கை மாவட்டத்திற்கு 100 மெட்ரிக் டன் உர மூட்டைகளும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான உரங்களை இருப்பு வைத்து வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தனியார் உர விற்பனை நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான உரங்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.