குடிநீர் உறிஞ்சிய 16 மின் மோட்டார்கள் பறிமுதல்


குடிநீர் உறிஞ்சிய 16 மின் மோட்டார்கள் பறிமுதல்
x

நெல்லையில் குடிநீர் உறிஞ்சிய 16 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாயில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில், தச்சநல்லூர் உதவி செயற்பொறியாளர் லெனின், இளநிலை பொறியாளர் ஜெயகணபதி ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் நேற்று தச்சநல்லூர் மங்களாகுடியிருப்பு பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சிய 16 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மின் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதால் குழாய் இணைப்புகளில் நீர் கசிவு ஏற்படுவதுடன், மற்ற வீடுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே குடிநீர் குழாயில் மின்மோட்டார் பொருத்தி இருப்பவர்கள் அவர்களாகவே மோட்டார்களை அகற்ற வேண்டும். இல்லையெனில் மின்மோட்டார்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்படும். மேலும் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். இதுவரை மொத்தம் 55 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபடுவார்கள்'' என்றார்.


Next Story