ஈரோடு ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை: மர்மநபரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு


ஈரோடு ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை: மர்மநபரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
x

ஈரோடு ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருடனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு

ஈரோடு ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருடனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

150 பவுன் கொள்ளை

ஈரோடு குமலன்குட்டை கணபதிநகர் 4-வது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 74). ஆடிட்டர். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (68). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. இவர்களது மகள் ஜனனி. பல் டாக்டரான அவர் ஆஸ்திரேலியாவில் கணவருடன் வசித்து வருகிறார். இதனால் துரைசாமியும், சுப்புலட்சுமியும் ஈரோட்டில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் பகலில் துரைசாமி வழக்கம்போல ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்றிருந்தார். சுப்புலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றார். அதன்பிறகு துரைசாமியும், சுப்புலட்சுமியும் மதியம் 2.30 மணிஅளவில் வீட்டுக்கு திரும்பினர். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இருந்த 150 பவுன் நகை கொள்ளை போனதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

2 தனிப்படைகள்

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது தொப்பி, முககவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து பின்பக்க கதவை உடைத்து நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இந்தநிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைவரிசை

கொள்ளையன் தப்பி சென்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை பார்வையிட்டும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை நோட்டமிட்டு, ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது மர்மநபர் கைவரிசை காட்டியுள்ளதால், ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபராக இருக்குமா? என்ற கோணத்திலும் போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.


Next Story