ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ரூ.15 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ரூ.15 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
x

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சேற்றில் கார் சிக்கியதால் கடத்தல் ஆசாமிகள் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

திருவள்ளூர்

கேட்பாரற்று நின்ற கார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென அழிஞ்சிவாக்கம்-இருளிப்பட்டி சாலையில் நுழைந்து அருகே உள்ள ஏரிக்கரை வழியாக சென்றது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி இருந்தது. அந்த சேற்றில் கார் சிக்கிக்கொண்டது. இதனால் காரை மீட்க முடியாமல் அதில் இருந்தவர்கள் இறங்கி சென்று விட்டனர். இதற்கிடையில் அழிஞ்சிவாக்கம் ஏரிக்கரை அருகே நீண்ட நேரமாக கார் ஒன்று கேட்பாரற்று நிற்பதாக சோழவரம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காரை சோதனை செய்தனர்.

ரூ.15 லட்சம் செம்மரக்கட்டைகள்

அதில் காரில் சுமார் 170 கிலோ எடை கொண்ட 21 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரிந்தது. செம்மரக்கட்டைகளுடன் காரை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.15 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடத்தல்காரர்கள் ஆந்திராவில் இருந்து காரில் செம்மரக்கட்டைகளை சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது போலீசார் இவர்களது காரை விரட்டி வந்ததால் அவர்களிடம் இருந்து தப்பிக்க குறுக்கு வழியாக அழிஞ்சிவாக்கம்-இருளிப்பட்டி சாலையில் நுழைந்து ஏரிக்கரை அருகே செல்லும் போது கார் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது.

இதனால் காரை மீட்க முடியாமல் செம்மரக்கட்டைகளுடன் காரை அங்கேயே விட்டுவிட்டு கடத்தல் ஆசாமிகள் தப்பிச்சென்று இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கடத்தல் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story