போக்குவரத்து விதிகளை மீறியதாக 14 வாகனங்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் போக்குவரத்து விதிமுறையை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட 14 வாகனங்களுக்கு அபராதம், வரி மூலம் ரூ.7 லட்சம் அதிகாரிகள் வசூல் செய்தனர்.
பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு அதிகமாக லாரிகளில் கற்கள், மணல் ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், செல்வி ஆகியோர் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அதிகமாக பாரம் ஏற்றி சென்ற லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சொந்த வாகனங்களை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்திய ஜீப்களும் சோதனையில் சிக்கின. இதையடுத்து அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் சொந்த பயன்பாட்டிற்கு வைத்திருந்த 3 ஜீப்களை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் தொழிலாளர்களை தொழிற்சாலைகளுக்கு விதிமுறைகளை மீறி ஏற்றி சென்று உள்ளனர். மேலும் அனுமதி இல்லாமலும், வரி செலுத்தாமல் வாகனங்களை இயக்கியதும் தெரியவந்தது.
இந்த வாகனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், இதை தவிர ஒரு இருக்கைக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை தவிர அதிகமாக கற்கள், மணல் ஏற்றி சென்றதாக 6 வாகனங்களும், அனுமதி இல்லாமல் இயங்கியதாக 5 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் அபராதம், வரியாக ரூ.7 லட்சம் வசூல் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.