13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை;தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை;தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

ஈரோடு

ஈரோடு அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருமணமான பெண்ணுடன் தொடர்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பச்சப்பாளி மேடு பகுதியை சேர்ந்தவர் வி.ராஜா (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் அங்கு வசித்தபோது திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணுக்கும், அவருடைய கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண், கணவரை விட்டு விட்டு தனியாக சென்றார்.

பின்னர் அந்த பெண் ஈரோடு அருகே உள்ள சித்தோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருந்தார். அவருடன் 13 வயது மகளும் வசித்து வந்தார். இதை அறிந்து கொண்ட ராஜா, அந்த பெண்ணை தேடி வந்தார்.

13 வயது சிறுமி

அதைத்தொடர்ந்து ராஜாவும், அந்த பெண்ணும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வந்தனர். 13 வயது சிறுமியும் ராஜாவை மாமா என்று அழைத்து உரிமையுடன் பழகி வந்தார். அந்த பெண் தினசரி வேலைக்கு சென்றுவிட்டு இரவில்தான் திரும்புவார்.

இந்தநிலையில் ராஜா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கினார். தொடர்ச்சியாக சிறுமியை மிரட்டியும் கட்டாயப்படுத்தியும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனை கடந்த 18-8-2022 அன்று பக்கத்து வீட்டு பெண் பார்த்து சிறுமியின் தாயாரிடம் தெரிவித்த பிறகே, இந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது.

20 ஆண்டு சிறை

அதைத்தொடர்ந்து ராஜா மீது அந்த பெண் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜாவை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஆர்.மாலதி வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில் குற்றம்சாட்டப்பட்ட ராஜாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கக்கோரியும் அந்த தீர்ப்பில் நீதிபதி ஆர்.மாலதி கூறி இருந்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜராகி வாதாடினார்.


Next Story