மானாமதுரை பகுதியில் 120 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
மானாமதுரை பகுதியில் 120 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
மானாமதுரை,
மானாமதுரை பகுதியில் 120 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகள் சோதனை
மானாமதுரை யூனியன் அலுவலகம், பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு பகுதிகள் ஆகிய பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து அப்பகுதியில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சரவணக்குமார், நகராட்சி ஆணையாளர் ரெங்கநாயகி, துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம் ஆகியோர் ஓட்டல், பேக்கரி ஆகியவற்றில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது பல்வேறு உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி மற்றும் கலர் ரசாயன பொடிகள் பயன்படுத்திய உணவு பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
கெட்டுப்போன இறைச்சி
அதன்படி சுமார் 120 கிலோ அளவிலான கெட்டுப்போன இறைச்சி மற்றும் 50 கிலோ அளவிலான கெட்டுப்போன பரோட்டாவை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். மேலும் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரிகளில் கெட்டுப்போன பிரட், பன் போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மேலும் இதுபோல் கெட்டுப்போன உணவுகளை வினியோகம் செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.