ரூ.11 லட்சம் தங்க, வைர நகைகள் திருட்டு
கோவை ராமநாதபுரத்தில் டாக்டர் வீட்டில் ரூ.11 லட்சம் தங்க, வைர நகைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக வேலைக்கார பெண் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை
கோவை ராமநாதபுரத்தில் டாக்டர் வீட்டில் ரூ.11 லட்சம் தங்க, வைர நகைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக வேலைக்கார பெண் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் டாக்டர்
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் அரவிந்தன். டாக்டரான இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவியும் டாக்டர் ஆவார். இவர்களது வீட்டில் திருச்சியை சேர்ந்த தமிழ்செல்வி(வயது 45) என்பவர் தங்கியிருந்து வீட்டு வேலைகளை பார்த்து வந்தார். இந்தநிலையில் ஸ்ரீதேவியின் கைப்பையில் இருந்த வைர மோதிரம் காணாமல் போனது. அவர் சந்தேகத்தின்பேரில், தமிழ்செல்வியிடம் கேட்டபோது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் தமிழ்செல்வியை அவர் வேலையை விட்டு நீக்கி விட்டார். பின்னர் சரோஜா என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு அமர்த்தினார்.
தங்க, வைர நகை திருட்டு
இதற்கிடையில் சரோஜா, தமிழ்செல்வியை செல்போனில் தொடர்பு கொண்டு காணாமல் போன வைர மோதிரம் குறித்து கேட்டார். அப்போது, தான் வைர மோதிரத்தை திருடியதை தமிழ்செல்வி ஒப்புக்கொண்டார். மேலும் சரோஜாவை சந்தித்து, அந்த வைர மோதிரத்ைத தமிழ்செல்வி கொடுத்துவிட்டு சென்றார். அவர், அந்த வைர மோதிரத்தை ஸ்ரீதேவியிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து ஸ்ரீதேவி தனது பீரோவில் வைத்திருந்த நகைகளை சோதனை செய்தார். அதில் 11 பவுன் தங்க நகை, 2 வைர மூக்குத்தி, 4 கைக்கெடிகாரங்கள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும். இதுகுறித்து ஸ்ரீதேவி, ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில் வேலைக்கார பெண் தமிழ்செல்வி மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தமிழ்செல்வி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
2 தனிப்படை அமைப்பு
போலீசாரின் விசாரணையில், தமிழ்செல்வி தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் திருச்சியில் பதுங்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து உள்ளனர். இதனால் அவரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் அவரை பிடிக்க நேற்று திருச்சி விரைந்தனர்.