100 சதவீதம் பணிகள் முடிந்தன: பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததும் அவினாசி-அத்திக்கடவு திட்டம் செயலுக்கு வரும்- செயற்பொறியாளர் தகவல்


100 சதவீதம் பணிகள் முடிந்தன: பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததும் அவினாசி-அத்திக்கடவு திட்டம் செயலுக்கு வரும்- செயற்பொறியாளர் தகவல்
x

அவினாசி-அத்திக்கடவு திட்டப்பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்த நிலையில் பவானி ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததும் திட்டம் தொடங்கப்படும் என்று சிறப்பு திட்ட செயற்பொறியாளர் கூறிஉள்ளார்.

ஈரோடு

அவினாசி-அத்திக்கடவு திட்டப்பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்த நிலையில் பவானி ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததும் திட்டம் தொடங்கப்படும் என்று சிறப்பு திட்ட செயற்பொறியாளர் கூறிஉள்ளார்.

முன்னாள் அமைச்சர் கோரிக்கை

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறண்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் குழாய் மூலம் தண்ணீர் நிறைத்து நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாக அவினாசி-அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தற்போது வானம்பார்த்த பூமியாக இருக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாய நிலமாக மாறும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பிறகு பணிகள் மிக வேகமாக நடந்தது. ஆனால் திட்டத்துக்காக குறிப்பிட்ட நாட்கள் நிறைவடைந்த பிறகும் அவினாசி -அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இதுதொடர்பாக தி.மு.க. பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

பொறியாளர் விளக்கம்

இந்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் அவினாசி சிறப்பு திட்டக்கோட்ட நீர்வளத்துறை செயற்பொறிளாளர் ரா.நரேந்திரன் ஒரு விளக்க கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2020-2021-ம் ஆண்டுகளில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக அவினாசி-அத்திக்கடவு திட்டப்பணிகள் தாமதமாகின. பின்னர் திட்டப்பணிகள் துரிதமாக நடைபெற்று குழாய்கள் பதிக்கும் பணி 100 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டது.

செயலாக்கம்

மொத்தம் உள்ள 1,045 குளம் குட்டைகளில் இதுவரை 908 குளம்-குட்டைகளுக்கு நீர் வழங்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் மீதம் உள்ள குளங்களுக்கு நீர் வழங்கி சோதனை செய்து முடிக்க இயலவில்லை.

வடகிழக்கு பருவமழை காலத்தில் போதிய மழைபெய்து பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து போதிய தண்ணீர் வந்ததும் மீதம் உள்ள குளம்-குட்டைகளில் தண்ணீர் வழங்கி சோதனை நிறைவு செய்யப்படும். அதைத்தொடர்ந்து அவினாசி-அத்திக்கடவு திட்டம் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அந்த விளக்க கடிதத்தில் செயற்பொறியாளர் ரா.நரேந்திரன் கூறி உள்ளார்.


Next Story