100 குரங்குகள் பிடிபட்டன
அரகண்டநல்லூர் பேரூராட்சியில் 100 குரங்குகள் பிடிபட்டன
திருக்கோவிலூர்,
அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. குரங்குகள் அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மதியம் வெட்டவெளியிலும், மரத்தடிகளிலும் அமர்ந்து சாப்பிடும் மாணவர்களின் உணவுகளை பறித்துச் சென்று விடுவதுடன், சாலையில் செல்பவர்களை துரத்தி அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை பிடுங்கி செல்கின்றன. இதனால் அரகண்டநல்லூர் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பான செய்தி கடந்த 21-ந்தேதி தினத்தந்தியில் வெளியானது. இதையடுத்து அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு உத்தரவின் பேரில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் கூண்டு வைத்து பிடித்தனர். இதையடுத்து பிடிபட்ட சுமார் 100 குரங்குகள் வாகனங்களில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டன.