காணாமல் போன 100 செல்போன்கள் மீட்பு; உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்
நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஒப்படைத்தார்.
நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுமார் ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 100 செல்போன்களை மீட்டனர்.
அந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடந்தது. சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கி, உரிமையாளர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.
தொடர்ந்து அவர் கூறும் போது, செல்போன் தொலைந்து விட்டால் போலீஸ்நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே 9498101814 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி தங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும் இணையவழி குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார். நிகழ்ச்சியில் போலீசார் கலந்து கொண்டனர்.