100 நாள் சம்பள பாக்கியை வழங்க வேண்டும்


100 நாள் சம்பள பாக்கியை வழங்க வேண்டும்
x

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என பேராவூரணி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்,

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என பேராவூரணி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

ஒன்றியக்குழு கூட்டம்

பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான அலிவலம் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன்விவரம் வருமாறு:-

நன்றி

ராஜலட்சுமிராஜ்குமார்:- கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதல்-அமைச்சர், பரிந்துரை செய்த எம்.எல்.ஏ. அசோக்குமார் மற்றும் தென்னங்குடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெரு தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம்மூர்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது,பேராவூரணி ஒன்றியத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு கடந்த பல வாரங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.பெரியநாயகி: சாலை வசதி செய்து தரவேண்டும். நாடங்காடு பள்ளிக் கூரை உடைந்துள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை

பாக்கியம் முத்துவேல்: ஒட்டங்காடு கடைவீதியில் ரவுண்டானா மற்றும் வேகத்தடை அமைத்து தர வேண்டும். வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

கூடுதல் நிதி

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் மூர்த்தி: தமிழ்நாடு அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் காலை உணவு திட்டம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத் தொகை என பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.மகளிர் உரிமைத்தொகை சிலருக்கு கிடைக்காத நிலை உள்ளது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் விடுபட்ட பொதுமக்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க உரிய உதவிகளை செய்ய வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் மாவட்ட கலெக்டரை சந்தித்து கூடுதல் சிறப்பு நிதி பெற முயற்சிக்க வேண்டும். எனக்கு தரப்பட்டுள்ள திட்டக்குழு உறுப்பினர் பொறுப்பை பயன்படுத்தி நமது பகுதிக்கு அதிக நிதி பெற்று தர முயற்சிப்பேன்.

சம்பள பாக்கி

வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன்: 100 நாள் வேலைத் திட்டத்தில் 7 வாரம் சம்பள பாக்கி இருந்தது. தற்போது இரண்டு வாரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. நிதி வந்ததும் பாக்கி இல்லாமல், சம்பளம் அனைவருக்கும் வரவு வைக்கப்படும். விடுபட்ட பயனாளிகளுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர் கோரிய இடங்களில் சாலை வசதி ஏற்படுத்தப்படும். நாடங்காடு பள்ளிக் கட்டிட வேலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஒட்டங்காடு சாலை பிரச்சினை தொடர்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு கடிதம் எழுதப்படும் என்றார்.

மக்கள் நம்பிக்கை

ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர்:

தங்களுக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் நம்மை பொதுமக்கள் உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர்.. அந்த நம்பிக்கைக்கு பங்கம் வராமல் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் உதவிகளையும் நாம் செய்ய வேண்டும். உறுப்பினர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிதி நிலைக்கு ஏற்ப நிச்சயம் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினாா் கூட்டத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, உறுப்பினர்கள் மதிவாணன், சுந்தர், அண்ணாதுரை, ராஜலட்சுமி ராஜ்குமார், பாக்கியம் முத்துவேல், அமிர்தவல்லி கோவிந்தராஜ் பெரியநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story