மொடக்குறிச்சி அருகே சம்பளம் வழங்கக்கோரி 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல்
மொடக்குறிச்சி அருகே சம்பளம் வழங்கக்கோரி 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே சம்பளம் வழங்கக்கோரி 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட எழுமாத்தூர் ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே திரண்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சம்பளம் வழங்கக்கோரி ஈரோடு-முத்தூர் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் வரிசையில் நின்றன.
பேச்சுவார்த்தை
சாலை மறியல் குறித்து தகவல் கிடைத்ததும், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரி திருநாவுக்கரசு, எழுமாத்தூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் 20 நாட்களுக்குள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டம் காரணமாக ஈரோடு-முத்தூர் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.