ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 21 சதவீதம் வீழ்ச்சி
textile
இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த மாதம் 21 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ஜனவரி மாதத்துக்கு பிறகு சீராகும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்திய அளவில் வீழ்ச்சி
பின்னலாடை வர்த்தகத்தின் மூலமாக இந்தியாவுக்கு அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டிக்கொடுக்கும் ஊராக திருப்பூர் விளங்கி வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் பனியன் தொழில் கடந்த கால சூழ்நிலைகள் காரணமாக முடக்க நிலையை சந்தித்துள்ளது. நூல் விலை அபரிமிதமான உயர்வு, உக்ரைன்-ரஷியா இடையேயான போர், உலக அளவில் பொருளாதார மந்தநிலை போன்றவை காரணமாக ஜவுளித்தொழில் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதன்காரணமாக திருப்பூர் பின்னலாடை வர்த்தகமும் முடக்கியுள்ளது.
இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த செப்டம்பர் மாதம் 18 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. அதன்தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதத்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் என்பது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் வீழ்ச்சியடைந்து இருக்கிறது. அதாவது தொடர்ச்சியாக ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் சரிவை சந்தித்துள்ளது.
ஏற்றுமதி வர்த்தகம் சரிந்தது
ஆயத்த ஆடைகள் மற்றும் ஓவன் ஆடைகள் தயாரிப்பில் இந்திய அளவில் திருப்பூரின் பங்களிப்பு மட்டும் 55 சதவீதமாக இருக்கிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி என்பது திருப்பூரில் ஆயத்த ஆடை தொழில் வீழ்ச்சியையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. திருப்பூரில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ரூ.20 ஆயிரத்து 250 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.18 ஆயிரத்து 80 கோடியாகும்.
டாலர் மதிப்பில் 2 ஆயிரத்து 572 பில்லியனாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 2 ஆயிரத்து 426 பில்லியன் டாலராக இருந்துள்ளது. கடந்த ஆண்டு என்பது கொரோனா காலத்தில் தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்த காலகட்டமாகும். அதன்பிறகு கொரோனா ஊரடங்கு முடிந்து தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கிய பின்னரும் நடப்பு ஆண்டில் பெரிய அளவில் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கவில்லை என்பதை காட்டுகிறது.
ஆர்டர்களை ஈர்க்க நடவடிக்கை
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-
நூல் விலை உயர்வு, உக்ரைன்-ரஷியா போர், உலக அளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாத ஏற்றுமதி என்பது அதற்கு முன்பு 4 மாத ஆர்டர்களை பொறுத்தது. நவம்பர், டிசம்பர் மாதம் வரை ஏற்றுமதி வர்த்தகம் என்பது குறைவாகவே இருக்கும்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆடைகள் தயாரிக்க வர்த்தக விசாரணை நடந்து வருகிறது. இந்த வர்த்தக விசாரணை ஆர்டராக மாறி ஆடைகளை தயாரித்து அனுப்பும்போது ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கு பிறகு ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்க தொடங்கும். ஏ.இ.பி.சி., பியோ, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து புதிய ஆர்டர்களை ஈர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பின்னலாடை தொழிலை பாதுகாக்க வசதியாக 'பேக்கிங் கிரெட்டிட்' மீதான வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வர்த்தக விசாரணை
கடந்த 4 மாதங்களாகவே திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் முழு வீச்சில் நடைபெறவில்லை. இருக்கின்ற ஆர்டர்களை மட்டுமே செய்து கொடுத்து வந்தனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு புதிய ஆர்டர்கள் வரும் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர். தற்போது வெளிநாடுகளில் இருந்து வர்த்தக விசாரணை மட்டுமே நடந்து வருகிறது. அவை ஆர்டர்களாக மாறும் என்று ஏற்றுமதியாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.