72 உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குடும்பம்


72 உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குடும்பம்
x

கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு இருக்கிறது. தனி குடும்ப வாழ்வின் மீதுதான் பலருக்கும் நாட்டம் இருக்கிறது.

கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு இருக்கிறது. தனி குடும்ப வாழ்வின் மீதுதான் பலருக்கும் நாட்டம் இருக்கிறது. விதிவிலக்காக, கூட்டுக் குடும்ப வாழ்வியலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 72 உறுப்பினர்கள் ஒன்றுபட்டு வாழும் நிகழ்வு கவனம் ஈர்த்துள்ளது.

ஒன்றல்ல.. இரண்டல்ல.. நான்கு தலைமுறைகளாக கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 'டோய்ஜோட்' எனப்படும் அந்த குடும்பத்தினர் அங்குள்ள சோலாப்பூரில் வசித்து வருகிறார்கள். இவர்கள் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அங்கிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நிமித்தமாக சோலாப்பூருக்கு குடியேறி இருக்கிறார்கள். தரை விரிப்புகள், திரை சீலைகள் சார்ந்த அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்கள். 72 பேர் குடும்பத்தின் அங்கமாக இருப்பதால் தினமும் 10 லிட்டர் பால் தேவைப்படுகிறது. அதுபோல் தினசரி சமையலுக்கு ரூ.1,200 மதிப்புள்ள காய்கறிகள் பயன்படுத்தப்படுகிறது.

அந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்தாலும், புதிதாக திருமணமாகி வந்தவர்கள் ஆரம்பத்தில் தடுமாறி இருக்கிறார்கள். திருமணமான புதிதில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்த்து முதலில் கவலைப்பட்டதாகவும், அனைவரும் நன்றாக பழகு வதையும், ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதையும் பார்த்து தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் அந்த குடும்பத்தின் பெண்கள் கூறுகிறார்கள்.

குடும்பத்தின் மருமகள்களுள் ஒருவரான நைனா டோய்ஜோட் கூறுகையில், ''ஒரு வருடத்துக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்புகளை மொத்தமாக வாங்குகிறோம். அதனால் சுமார் 40 முதல் 50 பைகள் அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அப்படி மொத்தமாக வாங்குவதால் மலிவு விலையில் எங்களுக்கு கிடைக்கிறது. இருப்பினும் அசைவ உணவு சமைப்பதாக இருந்தால் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகம் செலவாகும். ஆரம்பத்தில் குடும்பத்தினரின் எண்ணிக்கையை கண்டு பயந்தேன். ஆனால் எல்லோரும் எனக்கு உதவினார்கள். என் மாமியார் உள்பட அனைவரும் நன்றாக பழகினார்கள்'' என்கிறார்.

குழந்தைகளுக்கு வீட்டுக்குள்ளேயே நிறைய உறவினர்கள் இருப்பதால் அவர்களுடனேயே சேர்ந்து விளையாடி பொழுதை போக்குகிறார்கள்.

இதுபற்றி குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான அதிதி டோய்ஜோட் கூறுகையில், "நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது,​ விளையாடுவதற்கு வெளியே சென்றதில்லை. எங்கள் வீட்டிலேயே நிறைய பேர் உள்ளனர். அவர்களின் அன்பும், அறிவுரையும் வெளி நபர்களை தைரியமாக அணுகுவதற்கு எங்களை பக்குவப்படுத்தியுள்ளது. நாங்கள் ஒரே குடும்பமாக வசிப்பதை பார்த்து நண்பர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்'' என்கிறார்.

இந்த கூட்டுக் குடும்பத்தினரின் செயல்பாடுகள் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பரவி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைக்கு இது அழகான எடுத்துக்காட்டு என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.


Next Story