சுட்டமண்ணும் மலைக்க வைக்கும் பொருட்களும் (டெரகோட்டா)


சுட்டமண்ணும் மலைக்க வைக்கும் பொருட்களும் (டெரகோட்டா)
x

மிகவும் கரடு முரடான, நுண்துளை வகை களிமண்ணை சூளைகளில் சுட்டு தயாரிக்கப்படுவது டெரகோட்டா என்று அழைக்கப்படுகிறது.

செங்கற்களை சுட்டு தயாரிப்பது போலவே இதுபோன்ற டெரகோட்டா பொருட்களையும் சூளைகளில் சுட்டு தயாரிக்கிறார்கள். கலை, கைவினை, கட்டிடக்கலை மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் பொதுவாக சிற்பங்கள், பாத்திரங்கள், பூந்தொட்டிகள், நீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள், கூரை ஓடுகள், செங்கற்கள், மேற்பரப்பு மற்றும் வெளிப்புற அலங்காரப் பொருட்கள், நகைகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை பயன்பாடுகளுக்கும் டெரகோட்டா பயன்படுத்தப்படுகின்றது.

*டெரகோட்டா தரை டைல்கள் : சாடின் மற்றும் மேட் ஃபினிஷ்களில் கிடைக்கும், இது பதிக்கக்கூடிய எந்தப் பகுதிக்கும் அழகு மற்றும் நேர்த்தியை சேர்க்கின்றது.இவ்வகை டைல்கள் பெரும்பாலும் வெளிப்புற தரைத் தளங்களுக்கு பதிப்பதற்கு மிகவும் ஏற்றவையாக இருக்கின்றன.மழை, புயல், சுட்டெரிக்கும் வெப்பம் போன்ற இயற்கை நிகழ்வுகளை இந்த ஓடுகள் நன்றாகக் கையாளுகின்றன. மேலும், இந்த ஓடுகள் நீடித்த யூவி கதிர்கள் மற்றும் சூரிய ஒளி வெளிப்பாடு ஆகியவற்றால் எளிதில் மங்காது. எனவே வெளிப்புற தளங்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இவை இருக்கின்றன.இவை பலவித வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் வருகின்றன.இந்த ஓடுகள் நீண்ட ஆயுள் கொண்டதாகவும்,பராமரிப்பதற்கு எளிதாகவும் இருக்கின்றன.

*டெரகோட்டா ஜாலிகள் : இவ்வகை ஜாலிகள் அதன் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றவையாக இருக்கின்றன. ஊடுருவக்கூடிய முகப்புகள், சுவர் பகிர்வுகள் மற்றும் பிற அலங்கார நோக்கங்களுக்காக இவ்வகை ஜாலிகள் பயன்படுத்தப்படுகின்றன.பல வடிவமைப்புகளை கலந்து இவற்றில் தனித்துவமான வடிவமைப்புகளை உருவாக்குகிறார்கள். இந்த ஜாலி வடிவமைப்புகள்பாரம்பரிய மற்றும் சமகால வடிவமைப்பு பாணிகளுடன் போட்டி போடும் விதத்தில் பயணிக்கின்றன.

*டெரகோட்டா சீலிங் டைல்கள் : இவை ஏற்கனவே கூரைகளுக்கு போடப்பட்டிருக்கும் ஓடுகளின் கீழ் கூடுதல் வெப்ப காப்பு, நீர்ப்புகாப்பு மற்றும் அழகியல் கவர்ச்சியைக் கொண்டிருப்பதற்காக பயன்படுத்தப்படும் ஓடுகள் ஆகும்.உட்புற வடிவமைப்புடன் பொருந்தக்கூடிய பல வடிவமைப்புகளில் மிகவும் அழகான பாணியில் இவை கிடைக்கின்றன.

*டெரகோட்டா சுவர் டைல்கள் : களிமண் சுவர் டைல்ஸ் என்பது செங்கல் சுவரின் தோற்றத்தைப் போன்றே இருக்கும்.டெரகோட்டா சுவர் ஓடுகளின் தடிமன் சுமார் 10 முதல் 15 மிமீ வரை இருக்கும்.இந்த ஓடுகளை பசைகளைப் பயன்படுத்தி கடினமான பூசப்பட்ட சுவரில் ஒட்ட முடியும்.இவை பல அளவுகளில் கிடைக்கின்றன.

*டெரகோட்டா பேனல்கள் : வெளிப்புற முகப்புகளில் இவற்றை பயன்படுத்துவது இந்த சூழல் நட்பு டெரகோட்டா பேனல்களின் முதன்மை பயன்பாடு என்று சொல்லலாம்.மற்ற களிமண் ஓடுகளைப் போலல்லாமல், டெரகோட்டா பேனல்கள் அதிநவீன தோற்றத்தைக் கொடுக்கின்றன.டெரகோட்டா பேனல்களை முகப்புக்கு பயன்படுத்துவதற்கு வெப்ப பிரதிபலிப்பு மற்றும் வெப்பத்தை உறிஞ்சும் திறன் கொண்டவையாக இருப்பதும் முக்கியமான காரணமாகக் கூறப்படுகின்றது.

*டெரகோட்டா பூந்தொட்டிகள் : பூந்தொட்டிகள் என்று எடுத்துக்கொண்டால் நம்மை மலைக்க வைப்பதுபோல் ஏராளமான வடிவங்கள் மற்றும் டிசைன்களில் கிடைக்கின்றன. வீட்டின் உட்புறம் செடிகளை வளர்ப்பதற்கும், வெளிப்புறம் செடிகளை வளர்ப்பதற்கும், சீலிங்கில் தொங்கவிட்டு செடிகளை வைப்பதற்கும் ஏற்றவாறு ஏராளமான வகைகளில் மிகவும் கலைநயத்தோடு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் டெரகோட்டா பூந்தொட்டிகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.இந்த பூந்தொட்டிகளுக்கு வண்ணங்கள் தீட்டப்பட்டு வருபவை அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் இருக்கின்றது.

*சுடுமண் பாத்திரங்கள் : சுடுமண் பாத்திரங்கள் என்று எடுத்துக்கொண்டால் பண்டைய காலம் தொட்டே பானைகள்,தட்டுகள். டம்ளர்கள், மற்றும் சட்டிகள் போன்றவற்றை நாம் உபயோகப்படுத்தி வந்திருக்கின்றோம்.இப்பொழுது டெரகோட்டா குக்கர், டெரகோட்டா ஃபிரிட்ஜ்,வாணலி,பலவிதமானஜாடிகள்,தண்ணீர்பாட்டில்கள்,கோப்பைகள்,தோசைக்கல், டீ செட் மற்றும் மூடியுடன் வரும் பாத்திரங்கள் என இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்றார்போல் அனைவரும் உபயோகப் படுத்தும் வகையில் வந்திருப்பவை மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

*டெரகோட்டா நகைகள் : சுட்ட மண்ணில் செய்யப்படும் நகைகளை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு நெக்லஸ், நீண்ட மாலை, தொங்கட்டான், கம்மல், வளையல்,அட்டிகை,ஜிமிக்கி, டாலருடன் வரும் சிறிய கழுத்தணி என்று டெரகோட்டா நகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.இன்றைய இளநங்கையரிடம் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு நகையாவது தினசரி பயன்பாட்டில் கட்டாயம் இருக்கும்.மண்ணிலே கைவண்ணத்தை காட்டிய அந்த கைவினைத் தொழிலாளர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கண்கவர் வண்ணங்களில் அழகான டிசைன்களில் தயாரிக்கப்படும் இவ்வகை நகைகளில் வரும் சிறிய மணிகள்,நீண்ட வடிவத்தில் வரும் மணிகள் போன்றவை இந்த நகைகளுக்கு கூடுதல் அழகைத் தருகின்றன.

*அலங்காரப் பொருட்கள் : அலங்காரப் பொருட்கள் என்று எடுத்துக் கொண்டால் செடிகளை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல் வெறும் அலங்காரத்திற்காக வைக்கப்படும் பூந்தொட்டிகள், சுவரில் தொங்க விடப்படும்அலங்காரப்பொருட்கள்,அலங்காரமணிகள்,பொம்மைகள்,

விளக்கு மாடங்கள், விளக்குகள்,அறைகலன்கள்,முகம் பார்க்கும் கண்ணாடி சட்டங்கள்,மலர் அலங்கார தொட்டிகள் என்று ஏராளமான பொருட்கள் கலைநயத்துடன் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதைப் பார்க்க முடியும்.சுட்ட மண்ணின் இயற்கையான நிறத்தோடு மட்டுமல்லாமல் பல்வேறு கண்கவர் வண்ணங்களிலும் இவ்வகை டெரகோட்டா அலங்காரப் பொருட்கள் அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றன.குறிப்பாக சுட்ட மண்ணினால் செய்யப்படும் விநாயகர் சிலைகளும், குதிரை உருவங்களும் மிகவும் பிரபலம் என்று சொல்லலாம்.

இன்றைய காலகட்டத்தில் வரவேற்பறை, படுக்கையறை என ஏதாவது ஒரு அறையை டெரகோட்டா தீமில் அமைப்பது பிரபலமாகி வருகின்றது.அந்த அறையின் தரைக்கு டெரகோட்டா ஓடுகளை பதிப்பது அல்லது கூரைக்கு டெரகோட்டா ஓடுகளை அமைப்பது அல்லது சுவரின் ஏதாவது ஒரு பக்கத்திற்கு டெரகோட்டா பேனல்களை பதிப்பது மட்டுமல்லாமல் அந்த அறையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது என ஒவ்வொருவரின் கற்பனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றார்போல் இது போன்று அறைகளை அமைத்துக்கொள்வது இப்போது பிரபலமாகி வருகின்றது.


Next Story