ஆம்னி பஸ்களில் ஏலம் போல் எகிறும் 'டிக்கெட்' கட்டணம்; கட்டணத்தை அரசே நிர்ணயிக்குமா? பயணிகள் எதிர்பார்ப்பு
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைக்கான ஆம்னி பஸ் முன்பதிவு டிக்கெட் கட்டணம் ஏலம் போன்று எகிறி வருகிறது. தீபாவளி பண்டிகையின்போது (அக்.21-ந்தேதி) சென்னையில் இருந்து நெல்லைக்கு பயண கட்டணமாக ரூ.2,950 வசூலிக்கப்படுகிறது.
பயணிகள் நிர்பந்தம்
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்பட பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள், திருமண சீசன் போன்ற விழா காலங்களில் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், ரெயில்களில் பயணம் செய்வதற்கு 'டிக்கெட்' கிடைத்துவிட்டால், ஏதோ சாதித்தது போன்ற உணர்வு பயணிகள் மனதில் வெளிப்படுகிறது.
ஏனென்றால் பண்டிகை, விழா காலங்களின்போது சொந்த ஊருக்கு சென்று உற்றார்-உறவினர்கள், நண்பர்களை சந்தித்து, மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற ஆவல், ஆர்வம் பெரும்பாலானவர்களுக்கு மேலோங்கி இருக்கிறது. மேலும் அவசியம் மற்றும் அத்தியாவசிய பயணத்தை தவிர்க்க முடியாத சூழல் ஏற்படுவதால், எப்படியாவது ஊருக்கு சென்று விட வேண்டும். பஸ்சில் இடம் கிடைத்தால் போதும் என்ற நிர்ப்பந்தத்துக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர்.
மக்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். எனவே வழக்கமான நாட்களை காட்டிலும் பண்டிகை, விழா காலங்களின்போது 'டிக்கெட்' கட்டணம் பயணிகளை பதற வைக்கும் வகையில் உயர்த்தப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
தொடர் விடுமுறை
தற்போது ஆயுதபூஜை, தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் நெருங்கி வருகிறது. இந்த பண்டிகைகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. காத்திருப்போர் பட்டியலும் நீள்கிறது. எனவே 'தட்கல்' டிக்கெட்டை பலர் எதிர்நோக்கி காத்துள்ளனர்.
காந்தி ஜெயந்தி (அக்.2-ந்தேதி), ஆயுதபூஜை (அக்.4), விஜயதசமி (அக்.5) என தொடர் அரசு விடுமுறை வருவதால் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ஆம்னி பஸ்களில் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்த்து 'டிக்கெட்' முன்பதிவு செய்ய திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கட்டணம் 2 மடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆயுத பூஜையையொட்டி 30-ந்தேதி அன்று சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பஸ்சில் ரூ.3,900-ம், படுக்கை வசதி கொண்ட பஸ்சில் ரூ.2,400-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல் நெல்லைக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பஸ்சில் ரூ.2,698-ம், படுக்கை வசதி கொண்ட பஸ்சில் ரூ.2,100-ம், மதுரைக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பஸ்சில் ரூ.3,220-ம், படுக்கை வசதி கொண்ட பஸ்சில் ரூ.1,799, கோவைக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பஸ்சில் ரூ.2,999-ம், படுக்கை வசதி கொண்ட பஸ்சில் ரூ.1,599-ம் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின்போது இதைவிட கூடுதலாக 30 சதவீதம் வரை டிக்கெட் விலை ஏற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 24-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், அக்டோபர் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சென்னையில் இருந்து நெல்லைக்கு பயணம் செய்வதற்கு ரூ.2,950 முன்பதிவு கட்டணமாக இருக்கிறது.
இது 'டிரெய்லர்' தான்
ரெயில்களில் 'பிரீமியம் தட்கல்' என்ற பெயரில் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணத்தை கறப்பது போன்று ஆம்னி பஸ்களிலும் இருக்கைகளுக்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடு இருக்கைகளுக்கு மவுசு அதிகம் இருப்பதால், அந்த டிக்கெட்டின் கட்டண தொகை மட்டும் ஏலம் எடுப்பது போன்று எகிறி வருகிறது. பண்டிகை காலத்திலும் இந்த இருக்கைகளுக்கு அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் 'படையப்பா' திரைப்படத்தில், இது 'டிரெய்லர்' தான், இனிமே தான் 'மெயின் பிக்சர்' இருக்கிறது என்று வசனம் பேசுவார். அது போன்று தற்போதைய கட்டண உயர்வு டிரெய்லராக (முன்னோட்டம்) தான் பார்க்கப்படுகிறது. பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு தான் 'மெயின் பிக்சர்' இருக்கிறது என்பது போல கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்படும் என்ற அச்சம் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் சீசனாகவே மாறிவருகிறது. இதனை தடுக்க ஆம்னி பஸ்களின் கட்டணத்தை நிரந்தரமாக அரசு நிர்ணயிக்க வேண்டும் என பயணிகள் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்த பயணிகளின் ஆதங்கம் வருமாறு:-
முற்றுப்புள்ளி எப்போது?
ஐ.டி. ஊழியர் லிங்கதுரை (வேளச்சேரி):- பண்டிகை காலத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக ரெயிலில் டிக்கெட் கிடைக்காததால் ஆம்னி பஸ் பயணத்தை தேர்வு செய்தேன். ஆனால் ஆம்னி பஸ் கட்டணம் என்னை மலைக்க வைக்கிறது. இன்னும் கொஞ்சம் பணம் கூடுதலாக செலவு செய்தால் விமானத்திலேயே சென்றுவிடலாம். இப்படி டிக்கெட் கட்டணத்தை அதிகரித்தால் இனி கனவில்தான் ஆம்னி பஸ்களில் செல்லமுடியும்? இதற்கெல்லாம் ஒரு தீர்வை அரசு ஏற்படுத்தி தராதா?. பண்டிகை காலத்தில் பயணிகளை அதிர்ச்சியடைய செய்யும் இந்த போக்குக்கு முற்றுப்புள்ளி எப்போது?
அரசு டீசல் மானியம் தரலாமே...
இல்லத்தரசி உமா மகேஸ்வரி (திருவல்லிக் கேணி) :- கட்டண உயர்வுக்கு ஆம்னி பஸ்கள் சொல்வது டீசல் உயர்வைதான். எனவே டிராவல்ஸ் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, டீசல் மானியத்தை அரசு தரலாம். லட்சக்கணக்கான பயணிகள் நலனை கருதி அரசு இதனை செய்யலாம். அதேவேளை டிராவல்ஸ் நிறுவனங்களும் ஒரேயடியாக கட்டணத்தை உயர்த்துவது நல்லதல்ல. பண்டிகை காலத்தில் இந்த பிரச்சினை அதிகமாகவே எழுந்து வருகிறது. எனவே கண் துடைப்பு நடவடிக்கைகளாக இல்லாமல் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண டிராவல்ஸ் நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணவேண்டும்.
பயணிகளின் பிரச்சினை தீர...
தனியார் நிறுவன அதிகாரி பெருமாள் சாமி (விருகம்பாக்கம்) :- பொதுவாகவே பண்டிகை காலத்தில் ஆம்னி பஸ்களின் கட்டண உயர்வு தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. சாதாரண நாட்களில் குறைவான பயணிகளுடன் பஸ்களை இயக்குவதால், எழும் நஷ்டத்தை ஈடுசெய்ய பண்டிகை காலத்தை பயன்படுத்துவதாக டிராவல்ஸ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சில டிராவல்ஸ் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயித்து பயணிகள் தலையில் சுமையை ஏற்றுகின்றன. இதற்கு தீர்வு காண பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்தால் நல்லது. இதன்மூலம் பயணிகளின் பிரச்சினையும் தீரும்.
கண்ணை கட்டும் விலை உயர்வு
குடும்பத்தலைவி ரோகிணி (மேற்கு மாம்பலம்):- காய்கறி, மளிகை பொருட்கள் என அடுத்தடுத்த விலை உயர்வு கண்ணை கட்டுகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்கள் தவித்து வரும் நிலையில், ஆறுதல் தேடி சொந்த ஊர்களுக்கு செல்லும் போதெல்லாம் ஆம்னி பஸ்களின் கட்டணம் நம்மை வேதனையின் விளிம்புக்கே கொண்டு செல்கிறது. இவ்வளவு செலவு செய்து ஊருக்கு போய்த்தான் ஆகவேண்டுமா? என்ற எண்ணத்தை விதைக்கிறது. அதுவும் பண்டிகை காலமென்றால் சொல்லவே வேண்டாம், நிலைமை மிக மோசம். 2 மடங்குக்கும் அதிகமாக கட்டணத்தை உயர்த்தி விடுகிறார்கள். பயணிகள் நிலைமையை டிராவல்ஸ் நிறுவனங்கள் எண்ணி பார்க்காதது ஏன்?.
இது நியாயமான காரணமா?
பேக்கரி ஊழியர் ஆதிராஜா (கொடுங்கையூர்) :- சாதாரண நாட்களில் நஷ்டத்தில் பஸ்களை இயக்குவதாக டிராவல்ஸ் நிறுவனங்கள் சாக்கு சொல்வதை ஏற்கமுடியாது. அரசு பஸ்களில் பார்சல் சேவை சமீபத்தில் தான் அறிமுகமானது. ஆனால் ஆம்னி பஸ்களில் அந்த சேவை பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே பண்டிகை கால கட்டண உயர்வுக்கு அவர்கள் சொல்லும் நியாயம் ஏற்புடையது கிடையாது. ஆம்னி பஸ்களின் கட்டணத்தையும் அரசு நிர்ணயித்தால் தான் பயணிகளின் நீண்ட கால தவிப்பு அடங்கும்.
இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.
பஸ் உரிமையாளர்கள் கூறுவது என்ன?
பண்டிகை கால கட்டண உயர்வு குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:-
கட்டண உயர்வால் மக்கள் கோபம் கொள்வது நியாயம்தான். ஆனால் எங்களை கொள்ளையர்கள் போல நினைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது. டீசல் செலவு, பராமரிப்பு, வேலையாட்கள் சம்பளம், சுங்க கட்டணம், வாகன நிறுத்த கட்டணம், பஸ் நிலைய நுழைவு கட்டணம் என ஒரு பஸ்சுக்கே செலவு அதிகம். மேலும் பதிவுச்சான்று புதுப்பிப்பு என இதர செலவுகள் நேரிடுகின்றன. இதற்கிடையில் வாகன பராமரிப்பு, 'எப்.சி.' பணிகள் என வருடத்தில் பல நாட்கள் பஸ்களை இயக்க முடியாமல் போகிறது
ஒரு வருடத்துக்கு சராசரியாக 70 சதவீத பயணிகள்தான் பயணம் செய்கிறார்கள். எனவே வருடம் முழுவதும் முழுமையான அளவில் பயணிகளை ஏற்றினால்தான் எங்களது அடக்க தொகையை பெற முடியும். இதனால் நஷ்டத்தில் கூட பெரும்பாலான நாட்களில் பஸ்களை இயக்கி உள்ளோம்.
இதனால் பண்டிகை காலங்களில் சற்று கட்டணத்தை உயர்த்துகிறோம். அதுவும் நியாயமான அளவில்தான் செய்கிறோம். சிலர் செய்யும் தவறான செயல்பாட்டால் (அதிகப்படியான கட்டணம்) அனைத்து பஸ் உரிமையாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே ஆம்னி பஸ்களை இயக்குவதில் ஒரு வரையறையை உருவாக்கி, எங்களுக்கு கட்டுப்படியாகும் வகையிலும், மக்களுக்கு பாதிப்பில்லாத வகையிலும் கட்டண நிர்ணயத்தை மாநில அரசு கொண்டுவந்தாலும் ஏற்கத்தயார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.