ரத்த தானம் செய்வதை தடுக்கும் கட்டுக்கதைகள்
உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, ரத்த தானம் செய்யப்பட்ட ரத்தத்தை பகிர்ந்தளிப்பதில் நிலவும் பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 12 ஆயிரம் இறப்புகள் ஏற்படுகின்றன. சுமார் 4 மில்லியன் யூனிட் ரத்தம் பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு நபர் வருடத்திற்கு 2-3 முறை ரத்த தானம் செய்யலாம்.
ஆனால் கோடிக்கணக்கான மக்கள் ரத்ததானம் செய்யாமல் இருக்கிறார்கள். ரத்த தானம் செய்வதை தடுக்கும் விதமாக உலவும் சில கட்டுக்கதைகள் அதற்கு காரணமாக இருக்கின்றன.
கட்டுக்கதை 1: ஊசியை பார்த்தால் பயத்தில் மயக்கம் வந்துவிடும். அதனால் ரத்த தானம் செய்வது பற்றி சிந்திப்பதில்லை.
உண்மை: ஊசியை பார்த்து பலர் பயப்படுகிறார்கள். எந்தவொரு நோய் பாதிப்புக்கு ஆளானாலும் ஊசி போடுவதற்கு விரும்புவதில்லை. அதனை தவிர்த்து மருந்து, மாத்திரைகளை தேர்வு செய்கிறார்கள். அதனால் ரத்த தானம் செய்வதற்கும் விரும்புவதில்லை. இது உளவியல் ரீதியான பயம்தான். இதனை போக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
கட்டுக்கதை 2: ரத்த தானத்தின் போது தொற்றுகள் பரவுகின்றன.
உண்மை: ரத்த தானம் செய்யும்போது ரத்தம் மூலம் தொற்று ஏற்படலாம் என்பது பொதுவான கட்டுக்கதையாகும். ரத்தத்தை தானமாக பிறருக்கு வழங்கும் செயல்முறை மூலம் யாருக்கும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இருப்பினும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஊசியை மீண்டும் பயன்படுத்தினால் பாதிப்பு நேரக்கூடும். பொதுவாக மருத்துவமனைகள் மற்றும் ரத்ததான முகாம்களில் புதிய ஊசிகளை பயன்படுத்துவதற்கும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஊசிகளை உடனே அப்புறப்படுத்துவதற்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்படுவதால் பயப்பட தேவையில்லை. அதேவேளையில் ரத்த தானம் செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள ரத்த தான அமைப்புகள், பிரபலமான மருத்துவமனைகளுக்கு செல்லுங்கள். இது ரத்த தான செயல்முறையின்போது தொற்று அபாயம் ஏற்படுவதை தடுத்துவிடும்.
கட்டுக்கதை 3: ரத்த தானம் செய்வதற்கு அதிக நேரம் செலவளிக்க வேண்டியிருக்கும்.
உண்மை: இதுவும் கட்டுக்கதை தான். ரத்த தான செயல்முறைக்கு 20 நிமிடங்களே தேவைப்படும். அதிலும் உடலில் இருந்து ரத்தத்தை எடுப்பதற்கு 7 முதல் 8 நிமிடங்களே ஆகும். வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்த தானம் செய்ய முன் வருவோம்!
கட்டுக்கதை 4: ரத்த தானம் செய்தால் உடல் பலவீனமடைந்துவிடும்.
உண்மை: ரத்த தானம் செய்வதால் உடல் பலவீனமாக இருக்கும், ரத்த தானம் செய்த பிறகு ஹீமோகுளோபின் அளவு குறையும் என்பதெல்லாம் கட்டுக்கதைகள்தான். ரத்த தானம் செய்பவரின் உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஒரு டெசி லிட்டருக்கு 12.5 கிராம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவர் ரத்த தானம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்.
அவர் ரத்த தானம் செய்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை 0.7 முதல் 1 கிராம் மட்டுமே குறையும். அதனை ஈடு செய்வதற்கு உடல் இயக்கம் சீராக நடைபெற்று வேகமாக குணமடைய உதவும். அதனால் பலவீனத்தை உணர்வதற்குள் இயல்புக்கு திரும்பி விடலாம்.
ஒரு முறை ரத்த தானம் செய்தால் 3 மாத இடைவெளிக்கு பிறகே மீண்டும் ரத்த தானம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த காலகட்டம் பழைய நிலைக்கு திரும்புவதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கும். ரத்த தானம் செய்தால் பலவீனத்தை உணர்வது என்பது உளவியல் ரீதி யானதுதான்.
கட்டுக்கதை 5: நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் (பி.பி) கொண்டவர்கள் ரத்த தானம் செய்ய முடியாது.
உண்மை: ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்யக்கூடாது என்பதும் கட்டுக்கதை தான். ரத்த அழுத்தத்தை (பி.பி) கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், அதற்காக மருந்து உட்கொள்பவர்கள் ரத்த தானம் செய்யலாம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் நீரிழிவு நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம். இன்சுலின் தேவைப்படு பவர்கள் மட்டுமே ரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட அவர்களின் ஹார்மோன் அளவு சாதாரணமாக இருக்கும் வரை ரத்த தானம் செய்யலாம். மாதவிடாய் காலத்தில் பெண்கள் ரத்த தானம் செய்ய முடியாது என்பதும் கட்டுக்கதைதான். அவர்கள் சவுகரியமாக இருப்பதாக உணர்ந்தால் தாராளமாக ரத்த தானம் கொடுக்கலாம். அந்த சமயத்தில் ரத்த தானம் செய்வதால் எந்த தீங்கும் ஏற்படாது.