திருநங்கைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் தம்பதி
திருநங்கைகளுக்காக தொடங்கிய இலவச பயிற்சி இப்போது பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் குடும்ப தலைவிகளுக்கும், பெற்றோரை இழந்த கல்லூரி மாணவிகளுக்கும் வழங்கப்படுகிறது.
''தொழில் பயிற்சி பெறுவதிலும், தொழில் முயற்சிகள் தொடங்குவதிலும் திருநங்கைகள் ஆர்வமாக இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை'' என்ற ஆதங்கத்துடன் ஆரம்பிக்கிறார், வீரஜோதி. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்தவரான இவர், தமிழ் மொழியில் புலமை பெற்றவர். தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டே, திருநங்கைகளுக்கு வழிகாட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மூலிகை சோப் தயாரிப்பு பற்றிய பயிற்சிகளை திருநங்கைகளுக்கு இலவசமாக வழங்குகிறார். அது தொடர்பாக நம்முடன் பகிர்ந்து கொண்டவை...
''என்னுடைய கணவர் மாரிமுத்து, மூலிகை ஆராய்ச்சியாளர். இயற்கை மூலிகைகள் தொடர்பான பல ஆராய்ச்சிகளை முன்னெடுத்து, திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக அதை முறைப்படி ஆவணப்படுத்துகிறார். அந்தவகையில், கடந்த 7 வருடங்களாக அவர் மேற்கொண்டிருந்த மூலிகை சோப் உருவாக்கம் தொடர்பான ஆராய்ச்சிகளைதான் இப்போது திருநங்கைகளுக்கான தொழில் ஆதாரமாக கற்றுக்கொடுக்கிறேன்'' என்று பொறுப்பாக பேசும் வீரஜோதி, இதுவரை 70-க்கும் மேற்பட்ட திருநங்கைகளை மூலிகை சோப் தயாரிப்பாளராக உருமாற்றியிருக்கிறார். அவர்களுக்கு இலவச பயிற்சி கொடுப்பதுடன், அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட தொழில் முயற்சிகளுக்கும் வழிகாட்டுகிறார்.
''திருநங்கைகளுக்கு இலவசமாக பயிற்சி கொடுக்கும் ஆசையை என் கணவரிடம் கூறியபோது, கொஞ்சம் தயங்கினார். ஏனெனில் 7 வருட ஆராய்ச்சியின் பலனாய் கிடைத்தவற்றை இலவசமாக கற்றுக்கொடுப்பதில், அவருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. இருப்பினும் திருநங்கைகளின் போராட்ட வாழ்க்கையை தெரிந்து கொண்டவுடன், இலவசமாக பயிற்சியளிக்க சம்மதித்தார். ஆரம்பத்தில் 5 திருநங்கைகளுக்கு பயிற்சி கொடுத்தோம். அவர்கள் இயல்பானவர்களை விட, வெகுவிரைவாகவே கற்றுக்கொண்டனர்.
சோப் தயாரிக்கும் முறை, சோப் வகைகளுக்கு ஏற்ப மூலிகைகளை குளிரூட்டும் முறையில் அரைக்கும் பக்குவம், அதை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்க்கும்விதம், பேக்கிங் முறை... இப்படி 7 விதமான சோப் வகைகளின் தயாரிப்பு முறைகளையும், அதற்கு தேவையான மூலிகை மற்றும் மூலப்பொருட்களையும் விளக்கமாக கற்றுக்கொடுத்தோம்'' என்று முகமலர்ச்சியோடு பேசுபவர், இதுவரை 70-க்கும் மேற்பட்ட திருநங்கைகளை மூலிகை சோப் தயாரிப்பாளர்களாக உருமாற்றியிருக்கிறார். இவர்கள் அனைவரும் சொந்தமாகவே மூலிகை சோப் தயாரித்து, விற்க தொடங்கிவிட்டனர்.
''திருநங்கைகளுக்காக தொடங்கிய இலவச பயிற்சி இப்போது பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் குடும்ப தலைவிகளுக்கும், பெற்றோரை இழந்த கல்லூரி மாணவிகளுக்கும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் இலவசமாக பயிற்சி பெற்று, தொழில்முனைவோராக முன்னேறி உள்ளனர். எளிமையானவர்கள் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற யாராவது ஒருவர் கைத்தூக்கிவிட வேண்டும். அந்த பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. எனக்கான பொறுப்பை நான் சரிவர செய்து வருகிறேன்'' என்றவர், தன்னுடைய சமூக பணியில் மனநிறைவு அடைகிறார்.
''சோப் தயாரிக்க பெரிய முதலீடு தேவையில்லை. வேப்பிலை, பப்பாளி, சோற்று கற்றாழை, மஞ்சள், சந்தனம் என சோப் வகைகளுக்கு ஏற்ப எளிமையான இயற்கை மூலிகைகளுடன், தேங்காய் எண்ணெய் மட்டுமே சேர்க்கப்படுவதினால் சாமானியர்களால்கூட சோப் தயாரிக்க முடியும். அதனால்தான் திருநங்கைகளுக்கு ஏற்ற தொழில் முயற்சியாக இது அமைந்திருக்கிறது'' என்றவர், தன்னுடைய கணவரின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சோப் தொடர்பான மொத்த ஆராய்ச்சிகளையும் திருநங்கைகளின் நலனுக்காகவே பயன்படுத்த இருப்பதாக கூறினார். அந்தவகையில், 100-க்கும் மேற்பட்ட மூலிகை சோப் வகைகளை திருநங்கைகள் தயாரிக்க உள்ளனர்.