‘சாமந்தி டீ’ பருகுங்கள்


‘சாமந்தி டீ’ பருகுங்கள்
x
தினத்தந்தி 6 Oct 2019 6:30 AM IST (Updated: 5 Oct 2019 9:27 PM IST)
t-max-icont-min-icon

தினமும் அளவோடு தேநீர் பருகுவது மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேநீர் பருகாதவர்களுடன் ஒப்பிடும்போது அன்றாடம் தேநீர் பருகுபவர்களின் அறிவாற்றலும் மேம்படும் என்றும் அந்த ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது. ஆய்வை மேற்கொண்ட சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக குழுவின் உதவி பேராசிரியர் பெங் லீ, ‘‘எங்கள் ஆய்வின் முதல்கட்ட பரிசோதனையின் அடிப்படையில் தேநீர் பருகுவது மூளையின் கட்டமைப்புகளுக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கிறது. வயது அதிகரிக்கும்போது தோற்றப்பொலிவில் மாறுபாடு ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் வழிவகை செய்கிறது என்பதும் தெரியவந்துள்ளது’’ என்கிறார்.

இந்த ஆய்வுக்காக 60 வயதுக்கு மேற்பட்ட 36 பேரின் உடல் நலம், வாழ்க்கை முறை, உளவியல் ரீதியான செயல்பாடுகள் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட்டன. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் கிரீன் டீ, பிளாக் டீ போன்றவற்றை வாரத்திற்கு குறைந்தபட்சம் நான்கு முறையாவது பருகுபவர்களின் மூளை பகுதிகள் மேம்பாடு அடைந்திருப்பதை ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

‘‘தேநீர் பருகாதவர்களுடன் ஒப்பிடும்போது தேநீர் பருகுபவர்கள் சிறந்த அறிவாற்றல் கொண்டிருப்பதை எங்கள் முந்தைய ஆய்வுகளில் சுட்டிக்காட்டியுள்ளோம்” என்கிறார், பெங் லீ.

இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தேநீர் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தி மன நிலையை மேம்பாடு அடைய செய்யும், இதய நோய் வராமல் தடுக்கும் என்பது முக்கிய சாரம்சமாக அமைந்திருந்தது. சாமந்தி டீ, கிரீன் டீ, பிளாக் டீ, இஞ்சி டீ, ஓலாங் டீ போன்றவற்றை பருகுவது நல்லது. அவை மூளையின் ஆரோக்கியம் மட்டுமின்றி உடல் நலத்தையும் பாதுகாக்கிறது.

* சாமந்தி டீ பருகுவதன் மூலம் மாதவிடாய் வலி, சளி தொல்லைகள் கட்டுப்படும். அமைதியான மன நிலைக்கு வித்திடும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகுக்கும். எலும்பு சம்பந்தமான நோய் பாதிப்புக்குள்ளாகிறவர்களுக்கும் பலனளிக்கும்.

* கிரீன் டீ உடல் எடையை குறைப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது. அது சருமத்திற்கும் நன்மை அளிக்கும்.

* சளி, இருமல் தொல்லைக்கு ஆளாகுபவர்கள் தேர்வு செய்ய வேண்டிய சிறந்த பானம் இஞ்சி டீ. இது செரிமானத்திற்கும் உதவும். மன அழுத்தத்தையும் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது.

* ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளாகுபவர்கள் பிளாக் டீ பருகி வரலாம். கொழுப்பையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள இது உதவும். பிளாக் டீ பருகி வருவதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

* ஓலாங் டீ என்பது கருநீற சீன தேயிலை வகையை சார்ந்தது. சமீபத்திய ஆய்வில் ஓலாங் டீ பருகிவந்தால் நீரிழிவு நோய் குறைய உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அது உடல் எடையை குறைக்கவும் உதவும்.

Next Story