மும்பையில் காய்கறி விலை உயர்வு- தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை


மும்பையில் காய்கறி விலை உயர்வு- தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் காய்கறி விலை உயர்ந்து உள்ளது. தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மும்பை,

மும்பையில் காய்கறி விலை உயர்ந்து உள்ளது. தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி விலை உயர்வு

மராட்டியத்தில் புனே உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல பல ஊரகப்பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக மும்பை வாஷி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது.

இதனால் காய்கறி விலை கடந்த 10-20 நாட்களில் கிடு, கிடுவென அதிகரித்து உள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்க அதிகம் செலவான நிலையில், காற்கறி விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தக்காளி, முருங்கை காயின் விலை 2 மடங்கு வரை உயர்ந்து உள்ளது.

இதேபோல உருளை கிழங்கு, வெங்காயம் போன்றவற்றின் விலையும் உயர்ந்து உள்ளன. பச்சை பட்டாணி, பீட்ரூட் போன்ற காய்களின் விலையும் கணிசமான அளவு அதிகரித்து உள்ளது.

தக்காளி கிலோ ரூ.60

இதுதொடர்பாக தாராவி நேதாஜி குடியிருப்பில் காற்கறி வியாபாரம் செய்து வரும் ஹரிகரன் கூறியதாவது:-

கடந்த 2 வாரத்தில் காய்கறி விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ சின்ன வெங்காயம் தற்போது ரூ.120 ஆகி விட்டது. ரூ.30-40 வரை இருந்த தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல உருளை கிழங்கு ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், பீட்ரூட் ரூ.40-ல் ரூ.60 ஆகவும், முட்டைகோஸ் ரூ.40-ல் இருந்து ரூ.50-60 ஆகவும் உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

---


Next Story