டி.வி. பார்த்து கொண்டே விஷ தக்காளியை சமைத்து சாப்பிட்ட பெண் சாவு
டி.வி. பார்த்து கொண்டே விஷ தக்காளியை சமைத்து சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழநதார்.
மும்பை,
மும்பை மலாடு மேற்கு மார்வே சாலை பாஸ்கல் வாடி பகுதியை சேர்ந்தவர் ரேகாதேவி(வயது35). கடந்த வாரம் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டார். சில மணி நேரத்தில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது வீட்டிற்கு வந்த கணவர் நவுசாத், மனைவியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று ரேகா தேவி உயிரிழந்தார்.
ரேகா தேவி விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் பலியானது தெரியவந்தது. சம்பவத்தன்று அவர் டி.வி.யை பார்த்து கொண்டே நூடுல்ஸ் சமைப்பதற்காக எலியை கொல்ல விஷம் தடவி வைத்திருந்த தக்காளியை எடுத்து சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. டி.வி.யை பார்த்தப்படி உணவு சமைத்ததால் ஏற்பட்ட கவனக்குறைவால் இந்த துயர சம்பவம் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
--------------