மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்த அஜித்பவார் முடிவுக்கு ஆதரவா? - சரத்பவார் பரபரப்பு பேட்டி
மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்த அஜித்பவார் முடிவுக்கு ஆதரவா? என்பது குறித்த கேள்விக்கு சரத்பவார் பதிலளித்தார்.
மும்பை,
மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்த அஜித்பவார் முடிவுக்கு ஆதரவா? என்பது குறித்த கேள்விக்கு சரத்பவார் பதிலளித்தார்.
நினைவிடத்தில் மரியாதை
மராட்டியத்தில் நேற்று முன்தினம் நடந்த பரபரப்பு அரசியல் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தனர். அந்த கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். இந்த அரசியல் பூகம்ப அதிர்வலைகளுக்கு மத்தியில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சத்தாரா மாவட்டம் காரட்டில் உள்ள தனது அரசியல் வழிகாட்டியும், மராட்டியத்தின் முதலாவது முதல்-மந்திரியுமான யஷ்வந்த்ராவ் சவானின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முன்னதாக சரத்பவாரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்றனர். காரட்டை சேர்ந்தவரான காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவானும் உடன் இருந்தார்.
தொண்டர்கள் மத்தியில் பேச்சு
பின்னர் கட்சி தொண்டர்கள் மத்தியில் சரத்பவார் பேசுகையில், "கட்சியை உடைக்கும் பா.ஜனதாவின் யுக்திக்கு நமது ஆட்கள் சிலர் இரையாகிவிட்டனர். மராட்டியம் மற்றும் நாட்டில் மத மோதல்களை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது. அமைதியை விரும்பும் மக்கள் இடையே பயத்தை ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டியது உள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை நாம் காக்க வேண்டும்" என்றார்.
அஜித்பவார் முடிவுக்கு ஆதரவா?
பின்னர் சரத்பவாரை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது, அஜித்பவாரின் முடிவுக்கு உங்களது ஆதரவு இருப்பதாக தகவல்கள் பரவுகிறதே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சரத்பவார், " இப்படி கூறுவது மிகவும் மோசமானது. மோசமான மற்றும் புத்தியற்றவர்களால் மட்டுமே இப்படி சொல்ல முடியும். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறேன். ஏனெனில் சில தலைவர்களின் மோசமான செயல்பாடுகளை கண்டு தொண்டர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது" என்றார். தேசியவாத காங்கிரஸ் உடைந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் உரிமை கோர வேண்டும் என்று அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி விஜய் வட்டேடிவார் கூறியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், " தற்போது மராட்டிய எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் அதிக எண்ணிக்கையை கைவசம் வைத்துள்ளது. அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோருவது நியாயமான ஒன்றுதான். பலம் உள்ள கட்சி பதவியை கோரலாம்" என்றார்.
தகுதி நீக்க விவகாரம்
பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்த அஜித்பவார் உள்பட 9 பேரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி சபாநாயகருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் மனு அனுப்பி இருப்பது குறித்து கேட்டதற்கு சரத்பவார் அளித்த பதிலில், " நான் காலையிலேயே வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் என்ன செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஜெயந்த் பாட்டீல் கட்சி விதிமுறைகளின்படியே செயல்படுவார். தகுதி நீக்கம் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து நான் முடிவு செய்ய மாட்டேன். அதை ஜெயந்த் பாட்டீல் மற்றும் சகாக்கள் பார்த்துக்கொள்வார்கள். அது அவர்களின் சிறப்புரிமை. அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்கள் செய்தது தவறு என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஆனால் நான் யார் மீதும் வன்ம நோக்கத்துடன் அரசியல் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினர்.