மகாவிகாஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்- சரத்பவார் பேட்டி
மகாவிகாஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என சரத்பவார் கூறியுள்ளார்.
மும்பை,
மகாவிகாஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என சரத்பவார் கூறியுள்ளார்.
ஒன்றிணைக்க முயற்சி
புனே பல்கலைகழக துணை வேந்தர் ராம் தகாவாலே நினைவேந்தல் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் ஒரு நபரை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க நான் முயற்சி செய்து வருகிறேன். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதால் நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை.
தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்
மகாவிகாஸ் அகாடி கூட்டணி தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுப்பார்கள். இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி அல்லது மல்லிகார்ஜூன கார்கே மற்றும் நானும் உட்கார்ந்து ஆலோசனை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டியத்தில் பல உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே முடிந்துவிட்டது. அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதேபோல அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தலும், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.