தொழிலாளியை கொன்று உடலை கூறுபோட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை- தானே கோர்ட்டு தீர்ப்பு
தொழிலாளியை கொன்று உடலை கூறு போட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தானே கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தானே,
தொழிலாளியை கொன்று உடலை கூறு போட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தானே கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தொழிலாளி கொலை
நவிமும்பையில் உள்ள பொதுக்கழிப்பறையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் வேலை பார்த்து வந்தார். இவரது பணி சரியாக இல்லாததால் கழிவறை மேற்பார்வையாளர் தொழிலாளியை துப்புரவு பணியில் இருந்து நீக்கினார். அவருக்கு பதிலாக மேற்பார்வையாளரின் சகோதரருக்கு வேலையை வழங்கினார். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளி தனக்கு இழப்பீடு வழங்குமாறு மேற்பார்வையாளரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதனால் மேற்பார்வையாளர் தனது கூட்டாளியான காய்கறி வியாபாரியுடன் இணைந்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் தொழிலாளியை அழைத்தார். அங்கு நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து துணி, கயிற்றால் தொழிலாளியின் கழுத்தை நெரித்து கொன்றனர்.
3 பேர் கைது
பின்னர் அவரது உடலை அடையாளம் தெரியாமல் இருக்க மற்றொருவரை உடன் அழைத்து சென்று பல துண்டுகளாக கூறு போட்டனர். இதன்பின்னர் உடல் பாகங்களை சி.பி.டி. பேலாப்பூரில் உள்ள குப்பை தொட்டியில் 2 பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி வீசி எறிந்தனர். தகவல் அறிந்த போலீசார் துண்டு துண்டாக வெட்டிய உடல் பாகங்களை மீட்டனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கழிப்பறை மேற்பார்வையாளர், காய்கறி வியாபாரி மற்றும் உடலை கூறு போட்ட மற்றொருவரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
மேலும் இது தொடர்பாக தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் 15 சாட்சிகளிடம் நடத்திய இறுதி கட்ட விசாரணையில் 3 பேர் மீதான குற்றம் நிரூபணமானது.
இதன்பேரில் கழிப்பறை மேற்பார்வையாளர், காய்கறி வியாபாரி ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு கடு்ங்காவல் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.