மும்பை- ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் பணிகள் சீரான வேகத்தில் நடந்து வருகிறது - கட்டுமான நிறுவனம் தகவல்


மும்பை- ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் பணிகள் சீரான வேகத்தில் நடந்து வருகிறது - கட்டுமான நிறுவனம் தகவல்
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டப்பணிகள் சீரான வேகத்தில நடந்து வருவதாக கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது.

மும்பை,

மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டப்பணிகள் சீரான வேகத்தில நடந்து வருவதாக கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது.

புல்லட் ரெயில் திட்டம்

மும்பைக்கும், குஜராத்தின் ஆமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் கொரோனா காரணமாக இந்த பணிகள் தாமதமாகி வந்தன. தற்போது இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், சீரான வேகத்தில் நடந்து வருவதாகவும் இந்த பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய அதிவேக ரெயில் பாதை (என்.எச்.எஸ்.ஆர்.சி.) நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரே மாதத்தில் 3 பாலங்கள்

மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த பாதையில் 24 பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதில் 20 பாலங்கள் குஜராத்திலும், மீதமுள்ளவை மராட்டியத்திலும் கட்டப்படுகின்றன. மொத்தமுள்ள 24 பாலங்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 4 பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில் குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தின் பிலிமோரா-சூரத் நிலையங்களுக்கு இடையே 3 பாலங்கள் கடந்த ஒரு மாதத்தில் கட்டப்பட்டு உள்ளன. பூர்ணா நதி, மிந்தோலோ மற்றும் அம்பிகா நதிகளில் இந்த பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஒரு மாதத்தில் 3 பாலங்கள் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.

மிகவும் சவால் நிறைந்தது

குஜராத்தை பொறுத்தவரை இந்த புல்லட் ரெயில் வழித்தடத்தில் நீண்ட தூர பாலமாக நர்மதை நதியில் கட்டப்படும் 1.2 கி.மீ. பாலம் இருக்கும். மராட்டியத்தில் வைத்தர்னா நதியில் 2.8 கி.மீ. தூரத்துக்கு மிக நீளமான பாலம் கட்டப்படுகிறது. பூர்ணா நதியில் கட்டப்பட்டுள்ள 360 மீ. பாலத்தின் கட்டுமானப்பணி மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. குறிப்பாக அரபிக்கடலில் எழுந்த அலைகளின் வேக மாறுபாட்டால் மிகப்பெரும் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டன. இதைப்போல மிந்தோலா நதியில் கட்டப்பட்ட 240 மீ. பாலமும் அரபிக்கடலின் அலைகளின் வேகத்தால் எழுந்த இடையூறுகளை கடந்து கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது.

ரெயில் நிலையங்கள்

அம்பிகா ஆற்றில் 200 மீ. நீளத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, ஆற்றங்கரையின் செங்குத்தான சரிவு சவாலாக இருந்தது. இந்த பாலங்களை தவிர குஜராத்தில் வாபி, பிலிமோரா, சூரத், பாருக், வதோதரா, ஆனந்த், ஆமதாபாத், சபர்மதி பகுதிகளில் ரெயில் நிலையங்களின் கட்டுமானப்பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. இந்த புல்லட் ரெயில் திட்டத்தின் முதல் பகுதி 2026-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

துல்லியமான திட்டமிடல்

இதற்கிடையே, புல்லட் ரெயில் திட்டத்தில் ஆறுகள் மீது பாலங்கள் கட்டுவதற்கு துல்லியமான திட்டமிடல் தேவை என இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திர பிரசாத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'மிந்தோலா, பூர்ணா நதிகளின் மீது பாலங்கள் கட்டும்போது, அரபிக்கடலின் அலைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன. அம்பிகா ஆற்றின் மீது பாலம் அமைப்பதற்காக 26 மீட்டர் உயரத்தில் எங்கள் பொறியாளர்கள் பணியாற்றினர்' என தெரிவித்தார்.


Next Story