விதவைப்பெண் கொலையில் 2½ ஆண்டுக்கு பிறகு திருப்பம்; காதலனை கவ்விப்பிடித்த மோப்ப நாய்


விதவைப்பெண் கொலையில் 2½ ஆண்டுக்கு பிறகு திருப்பம்; காதலனை கவ்விப்பிடித்த மோப்ப நாய்
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விதவைப்பெண் கொலை வழக்கில் 2½ ஆண்டுக்கு பிறகு அதிரடி திருப்பமாக காதலனை மோப்பநாய் கவ்விப்பிடித்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

மும்பை,

விதவைப்பெண் கொலை வழக்கில் 2½ ஆண்டுக்கு பிறகு அதிரடி திருப்பமாக காதலனை மோப்பநாய் கவ்விப்பிடித்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

விதவை பெண் கொலை

மும்பை கோரேகாவ் ஆரேகாலனி பகுதியை சேர்ந்த விதவை பெண் ஷெனாகாஸ் சேக் (வயது40). இவர் தனது 3 மகள்களுடன் வசித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த ஷெனாகாஸ் சேக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வெளியே சென்ற அவரது மகள்களில் ஒருவர் வீட்டிற்கு வந்த போது தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சூரஜ்குமார் (25) என்பவர் போலீசாருக்கு விதவைப்பெண்ணின் குடும்பத்தை பற்றி தனக்கு நன்றாக தெரியும் என்று கூறி பல்வேறு தகவல்களை வழங்கினார். இருப்பினும் துப்பு கிடைக்கவில்லை.

அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் கொலையாளியை பிடிக்க சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் கொலை நடந்த வீட்டை போலீசார் சீல் வைத்திருந்தனர். 2½ ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் வழக்கில் உருப்படியான துப்பு கிடைக்காத நிலையில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது சீல் வைக்கப்பட்ட வீட்டை திறந்து ஏதாவது ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று பார்த்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு சிறிய நீல நிற துணி ஒன்று கிடந்தது. அது ஆண்கள் பயன்படுத்தும் துணி போன்று இருந்தது. இதை வைத்து போலீசார் துப்பு துலக்க முடிவு செய்தனர்.

மோப்பநாய் மூலம் விசாரணை

இதனால் போலீசார் லியோ என்ற மோப்பநாயை கொண்டு கொலையாளியை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். கைப்பற்றிய துணியை மோப்பம் பிடித்த நாய் அங்கும் இங்குமாய் சுற்றி இறுதியில் கொலை செய்யப்பட்ட ஷேனாகாஸ் சேக்கின் பக்கத்து வீடு அருகே சென்று குரைத்தது. அந்த வீட்டில் போலீசாரின் விசாரணைக்கு தகவல்களை வழங்கிய சூரஜ்குமார் வசித்து வந்ததும் தெரியவந்தது. ஆனால் மோப்ப நாய் சோதனையின் போது சூரஜ்குமார் வீட்டில் இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சூரஜ்குமார் மற்றும் அவருடன் தங்கி இருந்த சிலரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு வைத்து போலீசார் பிடிபட்டவர்களை வரிசையாக நிற்க வைத்தனர்.

கொலையாளி பிடிபட்டார்

மோப்பநாய் லியோயை அழைத்து வந்து கொலையாளியை கண்டுபிடிக்க மோப்பம் பிடிக்க வைத்தனர். அப்போது சூரஜ்குமாரை நோக்கி ேமாப்பநாய் குரைத்தது. இதனால் அவரை போலீசார் பிடித்து கிடுக்குபிடியாக விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலை செய்யப்பட்ட விதவை பெண் ஷேனாகாஸ் சேக்கிற்கும், சூரஜ்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷேனாகாஸ் சேக் தன்னை திருமணம் செய்யுமாறு அவரை வலியுறுத்தி வந்தார். இவரது தொந்தரவு தாங்க முடியாத சூரஜ்குமார் அவரை கொல்ல திட்டம் போட்டார். சம்பவத்தன்று பெண்ணின் வீட்டுக்கு சென்ற சூரஜ்குமார் பெண்ணை கொலை செய்து விட்டு நைசாக வெளியேறினார். தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதால், போலீசை ஏமாற்றி விடலாம் என்று கருதி வந்தார். ஆனால் அவர் விட்டு சென்ற துணியின் மூலம் போலீஸ் மோப்ப நாய் அவரை கவ்வி பிடித்து விட்டது.

போலீசாரின் கவனத்தை திசைதிருப்பி வழக்கில் இருந்து தப்பிக்க முயன்று 2½ ஆண்டுகளுக்கு மேலாக டிமிக்கி கொடுத்து வந்த சூரஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story