ஷிண்டேக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியதில் மகிழ்ச்சி இல்லை- சந்திரகாந்த் பாட்டீல் பேச்சால் பரபரப்பு
ஏக்நாத் ஷிண்டேக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியதில் மகிழ்ச்சி இல்லை என்றும், கட்சி மேலிட முடிவை கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொண்டோம் என பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
மும்பை,
ஏக்நாத் ஷிண்டேக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியதில் மகிழ்ச்சி இல்லை என்றும், கட்சி மேலிட முடிவை கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொண்டோம் என பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
ஷிண்டேக்கு முதல்-மந்திரி பதவி
மராட்டியத்தில் கடந்த மாதம் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகித்த சிவசேனாவை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள், மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். அவர்கள் ஆளும் கூட்டணிக்கு கொடுத்த ஆதரவை திரும்பபெற்றனர். இதனால் மகாவிகாஸ் அகாடி கூட்டணி கவிழ்ந்தது. இதையடுத்து சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
முன்னதாக மராட்டியத்தில் 106 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சைகள் 14 பேரின் ஆதரவு உள்ள பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிசுக்கு தான் முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரின் கணிப்புக்கு மாறாக பா.ஜனதா தலைமை தேவேந்திர பட்னாவிசை துணை முதல்-மந்திரி ஆக்கியது. 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே உள்ள ஏக்நாத் ஷிண்டேயை பா.ஜனதா தலைமை முதல்-மந்திரியாக அறிவித்தது, அந்த கட்சியினருக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
கனத்த இதயத்துடன்...
இந்தநிலையில் பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் ராய்காட் மாவட்டம் பன்வெலில் நடந்தது. இதில், மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சந்திரகாந்த் பாட்டீல் பேசியதாவது:-
"பா.ஜனதா கட்சியின் தேசிய தலைமை மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் நம்முடன் கூட்டணி சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவை முதல்-மந்திரி ஆக்க முடிவு எடுத்தனர். இந்த முடிவு கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டது. இந்த முடிவால் நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. எனினும் தலைமையின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்."
இவ்வாறு அவர் பேசினார்.
சந்திரகாந்த் பாட்டீலின் இந்த பேச்சு மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.