குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 4 சாமியார்கள் மீது சரமாரி தாக்குதல்- 20 பேர் மீது வழக்கு
சாங்கிலி அருகே குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 4 சாமியார்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மும்பை,
சாங்கிலி அருகே குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 4 சாமியார்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறுவனிடம் வழி கேட்ட சாமியார்கள்
சாங்கிலி மாவட்டம் ஜாத் தாலுகா லவங்கா கிராமம் வழியாக ஒரு வாகனத்தில் 4 சாமியார்கள் சென்றனர். அவர்கள் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டர்பூர் செல்ல வழி தெரியாமல் அந்த கிராமம் அருகே நின்ற சிறுவனிடம் விசாரித்தனர். அந்த சிறுவனுக்கு கன்னடம் தவிர வேறு மொழி எதுவும் தெரியவில்லை. இதனால் சாமியார்கள் சொல்வது அவனுக்கு புரியவில்லை.
சாமியார்களின் தோற்றத்தை பார்த்து சிறுவன் பயந்து போனான். ஒரு கட்டத்தில் திருடன்... திருடன்.. என கூச்சலிட்டான். இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த பலர் அங்கு திரண்டனர். சாமியார்கள் 4 பேரும் குழந்தை கடத்தல் கும்பல் என அவர்கள் கருதினர்.
சரமாரி தாக்குதல்
சாமியார்களை பிடித்து வைத்து கொண்ட அவர்கள் தடியால் அடித்து உதைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார்கள் என்று தெரியவந்தது.
போலீசார் தலையிட்டதை தொடர்ந்து, சாமியார்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அவர்கள் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை.
6 பேர் கைது
இதற்கிடையே சாமியார்களை கும்பல் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தை அடுத்து சாமியார்களை தாக்கிய கும்பலை சேர்ந்த 20 பேர் மீது உமாடி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு முன் பால்கர் அருகே காரில் சென்ற 2 சாமியார்கள் மற்றும் அவர்களது டிரைவரை குழந்தை கடத்தல்காரர்கள் எனக்கருதி கிராம மக்கள் அடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.