16 வயது சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு
பீகாரை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
மும்பை,
பீகாரை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் நவிமும்பை பகுதியில் அவரது தோழியை சந்தித்து பேசினார். அப்போது சிறுமி தனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் 35 வயது நபருடன் திருமணம் நடந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். உடனடியாக தோழி சிறுமியை நவசேவா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று சட்டவிரோத திருமணம் குறித்து புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி பீகார் மாநிலம் சிதாமர்கி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன் 35 வயது நபரை திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை குழந்தைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பினர். அங்கு நடந்த மருத்துவ சோதனையில் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ மற்றும் கற்பழிப்பு, குழந்தை திருமண தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் சிறுமியின் கணவர் மற்றும் தாய், தந்தை உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சிதாமர்கி போலீசுக்கு மாற்றினர்.