மெக்கானிக் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை:மைசூரு கோர்ட்டு தீர்ப்பு
மெக்கானிக் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மைசூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மைசூரு:
தகராறு
மைசூரு டவுன் பெலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 34). இவர், கார் விற்பனை நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் அனில்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார். அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் அனில்குமார், ஜெயராமிடம் கடனாக ரூ.20 ஆயிரம் வாங்கி இருந்துள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் வாங்கிய கடனை அனில்குமார் கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கொடுத்த பணத்தை ஜெயராம் திரும்ப கேட்ட போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
கொலை
இதனால் ஆத்திரமடைந்த அனில்குமார், ஜெயராமை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி அனில்குமார் தனது நண்பர் மகேஷ் என்பவருடன் சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 27-ந்தேதி கடனை திரும்ப தருவதாக ஜெயராமை, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விஜயநகர் போலீசார் அனில்குமாரையும், மகேசையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கபட்டனர்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை மைசூரு மாவட்ட சிவில் கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும் அவர்கள் இருவர் மீதும் போலீசார், கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து அந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதி கே.தொட்டேகவுடா தீர்ப்பு வழங்கினார்.
அதில் 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.37 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.